மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஏப் 2018

சிறப்புக் கட்டுரை: சூடாமணி புத்த விகாரும் அம்பேத்கர் நாள் விழாவும்!

சிறப்புக் கட்டுரை: சூடாமணி புத்த விகாரும் அம்பேத்கர் நாள் விழாவும்!

ஸ்டாலின் ராஜாங்கம்

சோழ நாட்டின் பகுதிகளாக இருந்தவை எனக் கருதப்படும் இன்றைய தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் பெளத்தம் செழிப்புற்று இருந்திருக்கின்றன. அதன் தடங்களை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இன்றளவும் காணலாம். பெளத்தச் சிற்பங்கள், புத்தர் சிலைகளாகவும் சைவ, வைணவக் கோயில்களாகவும் அறியப்படுவனவற்றுள் பிற வடிவங்களாவும் கண்டறியப்பட்டுள்ளன. சோழ நாட்டில் பெளத்தம் என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டதோடு அறுபதுக்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கண்டறிந்த பா.ஜம்புலிங்கம் அவர்களின் ஆய்வை இவ்விடத்தில் கருத்தில்கொள்ள வேண்டும். குறிப்பாக, கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதும் பெளத்தமே செல்வாக்கு செலுத்தியதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கலையியல் அறிஞரான சுரேஷ்பிள்ளை தஞ்சை, கும்பகோணம் கோயில் கட்டடங்களைக் குறியீட்டுரீதியில் பொருள்கொண்டு அவற்றின் மீதான பெளத்தத் தாக்கத்தைக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பின்னணிகொண்ட இந்த வட்டாரத்தில் வரலாற்று ரீதியாகப் பூம்புகாருக்கு அடுத்ததாக முக்கியத்துவமுடைய பெளத்தத் தலமாக நாகை எனப்படும் நாகப்பட்டினம் விளங்கியிருக்கிறது.

நாகையும் பௌத்தமும்

நாகை வட்டாரத்தில் நிறைய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் பல அருங்காட்சியகத்துக்குக் கொணரப்பட்டாலும் இப்போதும் கிராமங்களில் தனித்து வணங்கப்படும் சிலைகளாகவும் அவை இருக்கின்றன. முழு உருவ அமைதியோடும் தலையில்லாமலும் கைகால் உடைந்தும் இச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகடகடம்பனூர், புஷ்பவனம், கற்பகநாதர்குளம், வளையமாதேவி, விக்ரமம் (மதுக்கூர்), திருபாம்புரம், கிள்ளியூர் (நன்னிலம்), பெருஞ்சேரி, பூம்புகார் போன்ற இடங்களில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு இப்போதும் வணங்கப்படுகிறார். குறிப்பாகச் சிவன் என்ற பெயரும் புத்தரைக் குறிக்கும் என்று நிகண்டுகளில் கூறியிருப்பதற்கு ஏற்ப கிள்ளியூரில் புத்தர் சிலை, சிவனார் என்ற பெயரில் வணங்கப்படுவதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு புலப்படும் வடிவத்தில் மட்டுமல்லாது ஊர்ப் பெயர்கள், சடங்குகள், கோயில் அமைப்புகள், கதைகள், நம்பிக்கைகள் போன்றவற்றில் அவை தங்கிக் கிடக்கின்றன. அவற்றை இன்றைக்குச் சொல்லப்படும் அர்த்தத்தில் மட்டுமல்லாது காலந்தோறும் மாறிவந்திருக்கும் வடிவங்களைப் புரிந்துகொண்டும் குறியீட்டு ரீதியாக வாசித்தும் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக நாகையைச் சுற்றியுள்ள சன்னாபுரம், சன்னா நல்லூர், புத்தூர், புத்தகரம், சீயாத்தமங்கை (திருச்சாத்தமங்கை), புத்தகளூர், பூதமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம், சங்கமங்கலம், புத்தகுடி போன்ற ஊர்ப்பெயர்கள் இத்தகைய வரலாற்றைப் பெயர்களாகத் தக்கவைத்திருப்பதைப் பார்க்கலாம்.

இவற்றையெல்லாம் தாண்டி நாகையை பெளத்தத்திலிருந்து புறக்கணிக்க முடியாத அளவுக்கு முக்கியத்துவமுடைய இரண்டு மூன்று சான்றுகள் அழுத்துகின்றன. அவற்றுள் ஒன்று எல்லோரும் அறிந்த திருமங்கை ஆழ்வார் கதை. நாகை பெளத்த விகாரிலிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கவர்ந்துபோய் ஸ்ரீரங்கத்தில் மதில் கட்டினார் திருமங்கையாழ்வார் என்ற கதையை வைணவ நூல்களே கூறியிருக்கின்றன. இதை வைணவத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையேயான மோதலின் அல்லது உள்ளிழுத்தல் என்பவற்றின் குறியீடு என்று பலரும் கூறுகிறார்கள்.

அடுத்ததாக, பழையாறை. பூம்புகாருக்கு இணையான பௌத்தத் தொன்மை கொண்டதாக இவ்வூர் கருதப்படுகிறது. பெளத்தத்தின் முக்கிய மையமாகப் பழையாறை விளங்கியதென்று சுரேஷ்பிள்ளை கருதுகிறார். இவ்வூர் நாகை வட்டாரத்தில்தான் உள்ளது.

மூன்றாவதாக நாகை நகரம் பெற்றிருக்கும் முக்கியத்துவம். இது சோழ ஆட்சியின்போது துறைமுகப் பட்டினமாக விளங்கியதென்று அறியப்படுகிறது.

சூடாமணி விகாரத்தின் வரலாறு

நாகையில் பௌத்தம் சார்ந்து இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று சூடாமணி விகார் என்ற பெயரில் அறியப்பட்ட புத்த விகார். இதன் தோற்றம் பற்றிப் பல்வேறு தகவல்கள் உள்ளன. இதை ஏழாம் நூற்றாண்டுக்கு இணைக்கும் பதிவுகள் இருக்கின்றன. இந்த விகார் சீனக் கோயில் என்றும் புதுவெளிக் கோபுரம் என்றும் கறுப்புக் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன வணிகர்கள் வந்து சென்றபோது வணங்கியதால் இப்பெயர் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இக்குறிப்பை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இப்பெயர் சீனத்துக்கும் தமிழ்ப் பகுதிக்குமான பௌத்தத் தொடர்பிருந்தே உருவாகியிருக்க வேண்டும்.

பெளத்தம் வடக்கிலிருந்து வந்ததாக வரலாற்று ரீதியாக அறியப்பட்டாலும் தமிழ்ப் பகுதிக்கே உரிய அம்சங்களோடு இயங்கியதாகவும் அப்போக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்குப் பரவியதாகவும் தெரிகிறது. தெற்காசியாவின் பல பகுதிகளில் உள்ள பெளத்த விழாக்கள் தமிழ்ப் பகுதியில் இன்றளவும் வேறு பெயர்களில் இருப்பது, போதிதருமர் போன்று தமிழ் வட்டாரத்திலிருந்து சென்றவர்கள் சீனா போன்ற நாடுகளில் வேறு வேறு பெயர்களில் புனிதர்களாகக் கொள்ளப்படுதல், அயல்நாட்டிலிருந்து வந்த பெளத்தர்கள் தென்னிந்தியாவில் புனிதத் தலங்கள் இருப்பதாகக் கருதி வந்து சென்றமை போன்றவை இதற்கான சான்றுகளாகும். அந்த வகையில் சீன பெளத்தர்கள் வந்து சென்ற கோயிலாகவும் இது இருக்கலாம்.

இக்கோயில் கட்டப்பட்டது பற்றிய வெவ்வேறு தகவல்களிலிருந்தும் இக்கூற்றுக்கான சரடினைக் காணலாம். ஒரு கோயில் கிபி 720இல் பல்லவ மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது. அம்மன்னனின் பெயரில் நரசிம்ம போத்தவர்மன் என்பதை பெளத்தத் தொடர்பு கருதி அக்கோயிலே இது என்று கருதுவோர் உண்டு. அடுத்து சுமந்திரா தீவில் ஸ்ரீவிஜய என்னும் பகுதியையும் பர்மாவின் கடாரம் என்னும் பகுதியையும் ஆண்ட ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மன் வேண்டுகோளின்படி அவன் தந்தை சூடாமணி வர்மன் பெயரால் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இம்மன்னன் விருப்பம் பெளத்தமாக இருந்து அதற்காக விகார் கட்டுவதையும் தெற்காசிய தீவுகளுக்கும் தமிழ்ப் பகுதிக்குமான பெளத்தத் தொடர்பு இருப்பதையும் இங்கு பார்க்கிறோம். இதனாலேயே இந்த விகார், சூடாமணி விகாரை என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தவிர இது சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பெளத்தப் பள்ளி என்று பர்மாவின் கல்யாணி நகரக் கல்வெட்டு சாசனம் கூறுவதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாக வழக்கிலிருந்த இது பெளத்த வடிவங்கள் மாற்றப்பட்டபோது செல்வாக்கு இழந்ததாகத் தெரிகிறது. கடற்கரை ஓரமிருந்த இப்பகுதியை அரசிடமிருந்து வாங்கிய மிஷனரிகளால் வழக்கிழந்து கிடந்த விகாரையும் 1867ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டடம் எழுப்பப்பட்டது. பின்னர் விகாரையை ஒட்டியிருந்த இலுப்பை மரத்தை வெட்டிச் சாய்த்தபோது அதன் வேர்ப் பகுதியிலிருந்து ஐந்து புத்தர் சிற்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று பீங்கானால் ஆனது. மற்ற நான்கும் உலோகத்தால் ஆனவை.

இதேபோல தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 1865 முதல் 1934 வரையில் 350 பெளத்தச் செப்புத் திருமேனிகள் நாகையில்தான் கிடைத்திருக்கின்றன. இந்தத் திருமேனிகள் கிபி 10ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 15ஆம் நூற்றாண்டு வரையில் செய்யப்பட்டதென்று அறுதியிடப்பட்டுள்ளன. இவற்றிலுள்ள உருவங்கள் பல வகையான நேர்த்தியான வடிவங்களில் உள்ளன. இதைப் பற்றித் தமிழ்நாடு அருங்காட்சியகம் The Nagapattinam and Other Buddhist Bronzes in the Chennai Museum என்ற நூலை வெளியிட்டுள்ளது.

நாகை பௌத்தமும் அம்பேத்கரும்

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் என்னிடம் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளரும் அம்பேத்கரின் பௌத்த விளக்கங்கள்மீது ஈடுபாடு கொண்டவருமான பிரேமா ரேவதி நாகையில் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14ஆம் நாள் ஒரு கூட்டம் நடத்தப்போவதாகவும் நான் வர வேண்டுமென்றும் சொன்னார். பிறகு இரண்டொரு நாளில் அழைத்த அவர், தான் சூடாமணி விகாரை நினைவுபடுத்தும் விதமாகச் சங்கம் ஒன்றை ஏற்படுத்தியே அதன் சார்பாக அக்கூட்டம் நடத்தப்போவதாகவும் அதில் நான் நாகையில் பெளத்தம் பற்றிப் பேச வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

சூடாமணி விகார் என்ற பெயரை நினைவுபடுத்தி நாகையில் ஓர் அமைப்பைத் தொடங்கி அம்பேத்கருக்கு விழா எடுப்பதென்பதும் அதில் நாகையில் பெளத்தம் என்ற தலைப்பு பற்றிச் சிந்திக்கப் போவதையும் சேர்த்து யோசித்தபோது என்னை மிகுந்த உற்சாகம் சூழ்ந்துகொண்டது. அது வரலாற்றுக்குள்ளிருக்கும் பொருள் பொதிந்த அர்த்தம் ஒன்றைச் சமகாலத்தோடு தொடர்புபடுத்துவதாகத் தோன்றியது. அம்பேத்கர் பிறந்த நாளில் அங்கு செல்ல ஆர்வம் கொண்டேன்.

அதிகக் கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்றாலும் ரேவதி நடத்தும் வானவில் பள்ளியின் குழந்தைகளோடு நாற்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். நாகப்பட்டினம் என்ற சிறிய நகரில் முதன்முறையாக இது போன்று முற்றிலும் புதிய கோணத்தைப் பற்றிப் பேசும் கூட்டத்திற்குப் பார்வையாளர்கள் வந்திருந்தமை நிகழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியது. கூட்டத்தை ஓவியர் நட்ராஜ் ஒருங்கிணைத்தார். அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பு பற்றி பேராசிரியர் அரச முருகுபாண்டியனும் சட்டம் பற்றி வழக்கறிஞர் சுபாஷ் சந்திர போஸும் பேசினர். அம்பேத்கரின் பௌத்தம் பற்றிய சிந்தனாமுறையோடு வட்டார அளவில் வரலாற்று ரீதியாக இருந்துவந்த பெளத்த அடையாளங்களோடு உரையாடிப் பார்ப்பது என்ற முன்னுரையோடு நாகை என்கிற உள்ளூர் அளவிலான பெளத்தத் தடங்கள் பற்றி நான் பேசினேன்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 22 ஏப் 2018