மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஏப் 2018

வெள்ளித் திரை முதல் இரும்புத் திரை வரை...: ஒரு மினி வரலாறு !

வெள்ளித் திரை முதல் இரும்புத் திரை வரை...: ஒரு மினி வரலாறு !

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 50

இராமானுஜம்

தமிழக அரசு நடத்தி முடித்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் வழக்கம் போல என்ன சாதித்து விட்டார்கள் என்று விஷாலை வசைபாடும் தயாரிப்பாளர்கள் அவரை வலைதளங்களில் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விஷால் தரப்பில் அவருக்கு வாழ்த்துப்பா பாடிக் கொண்டிருக்கிறார்கள். மொத்த தயாரிப்பாளர்களும் ஒன்றை மறந்து விட்டார்கள். என்னை உங்களால் என்ன செய்து விட முடியும் என இறுமாப்புடன் இருந்த டிஜிட்டல் நிறுவனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

கலைப்புலி தாணு தலைமையிலான நிர்வாகக் குழு கியூப் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்த முடிந்தது. அதன் விளைவு குறிப்பிட்ட சில முக்கிய தயாரிப்பாளர்களுக்குக் கட்டணத்தில் சலுகை கொடுத்தவுடன் அமைதியானது சங்கம். தற்போது, மொத்த தயாரிப்பாளர்களுக்கும் கட்டணக் குறைப்பு கிடைக்க உள்ளது.

பட்ஜெட் அதிகமாகிவிட்டது அதனால் ஏரியா விலை அதிகம், விநியோக உரிமை அதிகம். அதனால் மினிமம் கேரண்டி, அதிக அட்வான்ஸ், படம் வெளியான பின்பு நஷ்டம் என்ற கூக்குரல் வருடம்தோறும் தமிழ் சினிமாவில் கேட்டுக்கொண்டே இருக்கும். நடிகர்கள் சம்பளம் மட்டும் கூடிக்கொண்டே போகும். இனி இது நடக்காதவாறு தடுக்க முயற்சி எடுத்திருக்கிறது நடிகர் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்.

எப்படி? படங்களின் உண்மை வசூலைத் தெரிந்துகொள்ளும் வசதியை கணினி மயமாக்கல் மூலம் சில மாதங்களில் நடைமுறைக்கு வருகிறபோது முதல் நாளில் 30 கோடி ரூபாய் வசூல் என்று எந்தப் படத்துக்கும் இனி விளம்பரம் கொடுக்க முடியாது. நடிகர்களுக்குத் தகுதியை மீறி சம்பளம் கொடுப்பது படிப்படியாகத் தடுக்கவும், ஒழுங்குபடுத்தவும் முடியும்.

தோல்விப் படம் கொடுத்த ஒரு நடிகரின் அடுத்த படம் முந்தைய படத்தை விட அதிக விலைக்கு விற்கவும் முடியாது, வாங்கவும் மாட்டார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமா வியாபாரத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.

நாங்கள் எடுத்த படத்தை வைத்து சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத நிறுவனம் முன்பதிவு சர்வீஸ் சார்ஜ் 30 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என எல்லாத் தயாரிப்பாளர்களும் கேட்டார்கள். தயாரிப்பாளர்கள் சங்கமே டிக்கெட் முன்பதிவுக்கு சர்வர் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தபோது அதை நிராகரித்தனர் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். ‘என் தியேட்டரில் என்ன வைக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்’ என்று BookMyShow கம்பெனிக்கு ஆதரவாக திருப்பூர் சுப்பிரமணி, அபிராமி ராமநாதன் ஆகியோர் பேசினார்கள். ஒரு டிக்கெட் முன்பதிவுக்கு 30 ரூபாய் என்பதை ஐந்து ரூபாய்க்குள் முடிக்க வேண்டும் என்று கொள்கை ரீதியாக தியேட்டர் உரிமையாளர்களை ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

எந்தப் படமாக இருந்தாலும் குறைந்த பட்சம் அரசு நிர்ணயித்த கட்டணம் அல்லது 100 ரூபாய் என்று இருந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது இந்தப் பேச்சுவார்த்தை. படத்தின் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல டிக்கெட் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் காட்டிலும் கியூப், UFO இரு நிறுவனங்களுக்கும் பஞ்ச பாண்டவர்களாக இருந்தவர்களில் ஒருவரான திருப்பூர் சுப்பிரமணியை முன்னிறுத்தி அவர் மூலமாகவே கட்டணத்தைக் குறைக்க வைத்திருக்கிறார்கள். இந்த முடிவுகள் உடனடியாக நடைமுறைக்கு வர சாத்தியமில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கம் பலமாக, ஆளுமைமிக்கதாக இருந்தால் மட்டுமே சாத்தியம். இதுவரை தயாரிப்பாளர்கள் படைப்பு, டிஜிட்டல் நிறுவனங்களிடம் இருந்தது. அதை லாவகமாகக் கைப்பற்றியிருக்கிறது. எந்தத் திரையரங்கிலும் புதிய படத்தை திரையிடத் தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி கொடுத்தால் மட்டுமே படங்கள் ரிலீஸ் ஆகும். காரணம், படத்தை மாஸ்டரிங் செய்து திரையிடுவது மற்றும் பாதுகாக்கும் வேலையைச் சங்கமே மேற்கொள்ளவிருப்பதால் கியூப் நிறுவனத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது.

தியேட்டர் சிண்டிகேட் உடைக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் போராடினார்கள். ஆனால், சத்தமின்றி அதை உடைக்கும் வேலையைத் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதே தொடங்கிவிட்டது விஷால் தரப்பு. கியூப் நிறுவனத்தின் பத்திரிகை தொடர்பாளர், அறங்காவலர்கள் எனப் பன்முக பணிகளைச் செய்து வந்த பஞ்ச பாண்டவர்களுக்குள் ஒருவரை முன்னிலைப்படுத்தி அவரையே டிஜிட்டல் கட்டண குறைப்பு பற்றி பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கக் கேட்டுள்ளனர்.

மாஸ்டரிங் என்கிற துருப்பு சீட்டைத் தயாரிப்பாளர்கள் சங்கம் முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறபோது சிண்டிகேட் அமைப்பு, நாட்டாமை தனம் செய்துவரும் திரைப்பட வினியோகஸ்தர்கள் அமைப்பு அனைத்தும் ஆட்டம் காண தொடங்கி விடும். அது எப்படி? நாளை காலை 7 மணி அப்டேட்டில்.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 19 ஏப் 2018