மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: கவர்னரைச் சிக்கவைத்த முதல்வர்!

டிஜிட்டல் திண்ணை: கவர்னரைச் சிக்கவைத்த முதல்வர்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது முதல் மெசேஜ்.

“காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மறந்து போராட்டம் நிர்மலா தேவியின் பக்கம் திரும்பிவிட்டது. கவர்னர் ஒருபக்கம் பிரஸ் மீட், எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் போராட்டம் எனப் பற்றி எரிகிறது நிர்மலா தேவி விவகாரம். மார்ச் மாதம் 13ஆம் தேதி நிர்மலா தேவிக்கும் மாணவிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் இது என்பது தெரியவந்திருக்கிறது. ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த ஆடியோ இப்போது எப்படி வெளியானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ‘இந்த ஆடியோ விவகாரம் கல்லூரி நிர்வாகத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தெரியும். சம்பந்தப்பட்ட மாணவிகள் இந்த ஆடியோ பதிவை ஒரு சிடியாகப் போடுவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்துதான் கல்லூரி நிர்வாகத்துக்கு லீக் ஆகியிருக்கிறது. அந்த ஆடியோ உரையாடலைக் கேட்டதுமே கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட பேராசிரியையைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டதாம். பேராசிரியையுடன் பேசிய மாணவிகளை அழைத்துக் கல்லூரியின் தரப்பில் சமாதானமும் பேசியிருக்கிறார்கள். ‘இந்த விஷயம் வெளியே போனால் கல்லூரிக்குத்தான் கெட்ட பெயர் வரும்’ என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் மாணவிகளும் இந்த விவகாரம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவரும் லோக்கல் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரும் நண்பர்கள். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துபவர், விஷயத்தை ஆளுங்கட்சிக்காரரிடம் சொல்லியிருக்கிறார். ஆளுங்கட்சிக்காரரோ இந்த விஷயத்தை அமைச்சர் ஒருவரின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். ‘அப்படியா...’ என அதிர்ச்சியுடன் கேட்ட அமைச்சர், ‘நான் அந்த ஆடியோவைக் கேட்கணுமே... எனக்கு அனுப்பி வையிங்க..’ எனச் சொல்ல.. அமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது அந்த ஆடியோ. அதைக் கேட்டதுடன் நிற்காமல், முதல்வர், துணை முதல்வர் என எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார் அமைச்சர். அதன் பிறகு இந்த ஆடியோ விவகாரத்தில் அரசியல் ஆரம்பித்திருக்கிறது.

தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்துவரும் கவர்னருக்கு இந்த ஆடியோவை வைத்து நெருக்கடி கொடுக்கலாம் எனத் துணை முதல்வருக்கு நெருக்கமான ஒருவர் ஐடியா கொடுத்திருக்கிறார். நான்கு நாட்களாக இது தொடர்பான ஆலோசனையை முதல்வர் நடத்தியிருக்கிறார். அதன் பிறகு அந்த ஆடியோவைக் கைதேர்ந்த ஆடியோ இஞ்ஜினியர் ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்கள். ‘இதுல அந்தப் பொண்ணுங்க பேரு எங்கேயும் வந்துடக் கூடாது... அதுபோல சவுண்ட் போட்டு எடிட் பண்ணிக் கொடுங்க...’ எனச் சொன்னார்களாம். அந்த மாணவிகள் பேசும் வாய்ஸ் குறைவான ஒலியாகவும், பேராசிரியை பேசுவது அதிக சத்தம் வருவது போலவும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. பிறகுதான் அருப்புக்கோட்டையில் உள்ள ஒருவரின் செல்போனில் இருந்தே முதலில் இந்த ஆடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. முதல்வர் நினைத்தது போலவே இந்த ஆடியோவால் கவர்னருக்கு நெருக்கடிகள் அதிகமாகிவிட்டன. கல்லூரி நிர்வாகமோ, சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சென்டர்காரர் மீது கடுமையான கோபமாகி அழைத்து விசாரித்திருக்கிறார்கள். அவரோ, அமைச்சர் பெயரைச் சொன்னதும், கல்லூரி தரப்பு அமைதியாகிவிட்டதாம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

பதிலுக்குக் காத்திருக்காமல், அடுத்த மெசேஜும் வந்து விழுந்தது. “கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிர்மலா தேவி நடந்ததைப் பற்றி எதுவும் கவலைப்படவே இல்லையாம். ‘இதில் என்னோட தப்பு என்ன இருக்கு? யாரு கேட்கச் சொன்னாங்கன்னு நான் வெளியே சொன்னால், அவங்களுக்குதான் சிக்கல். என்னை எப்படிக் காப்பாற்றாமல் விடுறாங்கன்னு பார்க்கிறேன்’ என்று சொல்லிவருகிறாராம். கவர்னர் அண்மையில் மதுரைக்கு வந்த சமயத்தில் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில், நிர்மலா தேவிக்கு தனியாக சூட் ரூம் ஒதுக்கியது எப்படி என்ற கேள்வியை மருத்துவர் ராமதாஸ் எழுப்பியிருக்கிறார். பேராசிரியர் கேட்டகிரியில் இருக்கும் ஒருவருக்குப் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுசில் சூட் ரூம் கொடுக்கப்பட்டது இது முதல் முறை இல்லையாம். இதற்கு முன்பே நிர்மலா தேவிக்குப் பலமுறை காமராஜர் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுசில் விதிகளை மீறி சூட் ரூம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

விதிகளை மீறச் சொன்னவர் சென்னையில் இருக்கிறார் என்று கை காட்டுகிறார்கள் பல்கலைக்கழகத்தில். ‘நாங்க என்னங்க பண்ண முடியும்? அங்கே இருந்து கொடுக்கச் சொல்றாங்க. நாங்க கொடுக்கிறோம்..’ என்று சொல்லி வருகிறார்கள். பல்கலைக்கழக ஊழியர்களுமேகூட, நிர்மலா தேவி விவகாரத்தில் சென்னையை நோக்கித்தான் கை காட்டுகிறார்கள். சென்னையில் சிக்கப்போவது யார் என்பதுதான் இப்போதைய கேள்வி!” என்று முடிந்தது அந்த மெசேஜ். இரண்டையும் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon