மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் மனிதர்!

மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் மனிதர்!வெற்றிநடை போடும் தமிழகம்

பாரீஸ் நகரைச் சேர்ந்த ஜெரோம் ஹாமான் (43) என்பவர் மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர். இவருக்கு பாரீஸ் மருத்துவர்கள், இரண்டுமுறை முகமாற்று அறுவை சிகிச்சை செய்து புதிய சாதனை புரிந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரைச் சேர்ந்த ஜெரோம் ஹாமான் மரபியல் நோய்க் காரணமாக, 2010 ஆம் ஆண்டு ஜெனடிக் மியுடேஷன் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நோயின் காரணமாக, ஜெரோம் உடலில் உள்ள நரம்புகளில் கட்டிகள் உருவாகி, அதன் வளர்ச்சியால், அவரது முகம் முற்றிலும் சிதைந்து காணப்பட்டது. இதையடுத்து, பாரிஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2016ஆம் ஆண்டு ஜெரோம் முகமாற்று அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டார். இந்த சிகிச்சைக்குப் பிறகு அவரது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினால் பாதிப்பும், அறுவை சிகிச்சை நடந்த இடத்திலிருந்த திசுக்களில் சிதைவும் ஏற்படத் தொடங்கின.

இதன் காரணமாக, மீண்டும் 2017ஆம் ஆண்டு அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முகமாற்று அறுவை சிகிச்சை செய்த ஜெரோமின் புதிய முகத்தை மருத்துவர்கள் முற்றிலும் அகற்றி விட்டனர். கடந்த 5 மாதங்களாக ஜெரோம் கண் இமைகள், காதுகள், தோல் ஆகியவை இல்லாமல் இருந்தார். வேறு வழியில்லாமல் மீண்டும் ஜெரோமுக்கு முகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

22 வயதான உயிரிழந்த இளைஞர் ஒருவரின் முகத்தைத் தானமாக பெற்று, ஜெரோமுக்கு மீண்டும் இரண்டாவது முறையாக முகமாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். இந்த இரண்டாவது அறுவை சிகிச்சையும் பாரீஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்து சாதனை புரிந்துள்ளனர். தற்போது மூன்று முகங்களைப் பெற்ற உலகின் முதல் மனிதர் என்ற பெயரோடு ஜெரோம் இருக்கிறார்.

"முதன்முதலில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்தபோது, இதுதான் என்னுடைய புதிய முகம் என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் , இரண்டாவது முறையாக முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உள்ளதுதான் என்னுடைய புதிய முகம் என நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என ஜெரோம் தெரிவித்தார்.

"அறுவை சிகிச்சையின்போது, எவ்விதச் சோர்வும் இல்லாமல் ஜெரோம் மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துவந்தார். மேலும் இந்தச் சிகிச்சையின் மூலம் ஒருவருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றும் தெரியவந்துள்ளது" என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon