மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

கத்துவா சிறுமி: ஊடகங்களுக்கு அபராதம்!

கத்துவா சிறுமி: ஊடகங்களுக்கு  அபராதம்!

காஷ்மீர் கத்துவா சிறுமி வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர், புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள், சிறார் உட்பட 8 பேர் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வழக்கு தொடர்பாகச் சில ஊடகங்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன. இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடுதல் என்பது தனிப்பட்ட, அந்தரங்க உரிமையை மீறுவதாகும் என்று கூறிய நீதிமன்றம் இது ஊடகங்களுக்குத் தெரியாதா என்று கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (ஏப்ரல் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகையை ஜம்மு காஷ்மீர் நிவாரண நிதியில் சேர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்ற சட்டம் தெரிந்திருந்தும் அறியாமையால் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஊடகங்கள் மன்னிப்புக் கேட்டன.

இதை விசாரித்த நீதிமன்றம் பாலியல் பலாத்கார நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படம் வெளியிடுவது அரசியலமைப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் இதை மீறினால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பதையும் பற்றி ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon