மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 21 பிப் 2020

சாஹோ: மறக்க முடியாத காவியம்!

சாஹோ: மறக்க முடியாத காவியம்!

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சாஹோ' படத்தை, பிரபல பாலிவுட் நிறுவனம் வெளியிட முன்வந்துள்ளது.

பாகுபலி, பாகுபலி 2 வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும் புதிய படம் 'சாஹோ'. இந்தப் படம் 150 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகிறது. இப்படத்துக்காக பிரபாஸ் தன் உடலமைப்பையே மாற்றி படத்தில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் நடித்துவருகிறார்.

யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடந்துள்ளது. இந்த நிலையில் பூஷன் குமாரின் டிடி சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை வெளியிட யு.வி. கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து பூஷன் குமார் கூறும்போது, “சாஹோவின் உலகளாவிய அணுகுமுறையும் படைப்பாக்கமுமே என்னை மிகவும் ஈர்த்தது. பிரபாஸ் அகில இந்திய நட்சத்திரமாக இருப்பினும், கதையின் உள்ளடக்கமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும் உலகத் தரத்தினை மிஞ்சியதாக அமைந்துள்ளன. இது ஒரு அற்புதமான கூட்டணி. இந்தி ரசிகர்களுக்காக இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

"ஆரம்பத்திலிருந்தே சாஹோ மாபெரும் காவியச் சித்திரமாகவே உருப்பெற்றுவருகிறது. மேலும் ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஒரு திரைக் காவியத்தை விருந்தாக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் கவனமாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்" என்று பிரபாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 'சாஹோ' திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon