மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

கடல் உணவு ஏற்றுமதியில் தரக் கட்டுப்பாடு!

கடல் உணவு ஏற்றுமதியில் தரக் கட்டுப்பாடு!

இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் அதிகளவிலான கடல் உணவுகளை இறக்குமதி செய்கிறது. இந்த வணிகத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவையைத் தொடர்ந்து உறுதி செய்துகொள்ள இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி கடல் உணவு சரக்குகளின் தரத்தை உறுதி செய்ய கண்காணிப்பு மற்றும் சோதனைக்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தியாவிடமிருந்து ஏராளமான இறால் மீன்களை இறக்குமதி செய்பவர்களில் ஐரோப்பிய ஒன்றியமும் அடங்கும்.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “ஏற்றுமதி செய்யும் சரக்கில் பத்து சதவிகிதத்திலிருந்து ஐம்பது சதவிகிதத்தைச் சோதனை செய்வது என்றும், தரநிலைகளைச் சந்திக்காத சரக்குகளைக் கொண்டுவரும் ஏற்றுமதியாளர்களைத் தகுதிநீக்கம் செய்து கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இம்முடிவு குறித்து நாங்கள் வருத்தத்தில் உள்ளோம். தரக்குறைவான சரக்குகளைத் தடுத்து நிறுத்த எங்களது தரப்பில் சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தப் பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். இதுகுறித்த விரிவான விளக்கத்தை ஏற்றுமதி சோதனை கவுன்சில் தயாரிக்கவுள்ளது. இதை இந்திய அரசின் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளிடம் விளக்குவர்” என்று தெரிவித்துள்ளார்.

கடல் உணவு கண்டறிதல் மென்பொருள் மற்றும் சோதனைக்காகப் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த தகவல்கள் சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகத்திடம் பகிரப்படும். சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் கொள்கைகளுக்குச் சுகாதார மற்றும் உணவுப் பாதுகாப்புப் பொது இயக்குநரகமே பொறுப்பு வகிக்கிறது. இந்தச் சந்திப்பு அடுத்த மாதம் புருசல்ஸில் நடைபெறவுள்ள உலகளாவிய கடல் உணவு நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் கடல் உணவுகளின் தரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதனால், சோதனைக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கவும், தரக்குறைவான உணவுகளை அனுப்புவோரைத் தடை செய்யவும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து புருசல்ஸில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

2016-17ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல்சார் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு 9.83 சதவிகிதம் அதிகரித்து 6.12 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் கடல்சார் ஏற்றுமதிப் பொருள்களில் ஐரோப்பிய ஒன்றியம் 18 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது. இதில் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து அதிகளவில் கடல் உணவுகளை இறக்குமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon