மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 21 பிப் 2020

ஆளுநரை மன்னித்த பத்திரிக்கையாளர்!

ஆளுநரை மன்னித்த பத்திரிக்கையாளர்!

பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தொடர்பாக, 'பாராட்டுவதற்காக பேத்தி போல நினைத்து கன்னத்தில் தட்டியதாக' ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கும் செல்போன் உரையாடல் சர்ச்சையை எழுப்பிய நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால், நிர்மலா தேவி யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்குப் பேரன்கள், கொள்ளுப் பேரன்கள் இருக்கும் போது, என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம்" என்று தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில், 'தி வீக்' பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்ரமணியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காத ஆளுநர், அவரது கன்னத்தில் தட்டிச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த லக்ஷ்மி சுப்ரமணியன், "ஆளுநர் ஒரு அதிகாரி மனப்பான்மையுடன் என் அனுமதியில்லாமல் என்னுடைய கன்னத்தில் தட்டியுள்ளார். தாத்தாவின் மனநிலையிலிருந்து ஆளுநர் தட்டிக்கொடுத்தார் என்று எடுத்துக்கொண்டாலும், என்னைப் பொறுத்தவரை அது தவறு" என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு எதிராக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆளுநரின் செயலுக்குத் தலைவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து பெண் நிருபருக்கு ஆளுநர் இன்று (ஏப்ரல் 18) எழுதியுள்ள மின்னஞ்சலில், "நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் நீங்கள் கேள்வி ஒன்றை என்னிடம் எழுப்பினீர்கள். அது நல்ல கேள்வியாக இருந்தது, எனவே உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக என்னுடைய பேத்தியைத் தட்டிக் கொடுப்பது போலக் கன்னத்தில் தட்டிக் கொடுத்தேன். நான் பத்திரிகைத் துறையில் 40 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன் என்ற முறையில் உங்களின் கேள்வியைப் பாராட்டுவதற்காகவே அப்படிச் செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தில், "உங்களின் ஈ.மெயிலைப் பார்த்து அந்த சம்பவம் தொடர்பான உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு நீங்கள் ஈ.மெயில் வாயிலாகப் பதில் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள லக்ஷ்மி சுப்பிரமணியன், "நேற்று நடந்த சம்பவம் குறித்து நீங்கள் வருத்தம் தெரிவித்த கடிதம் எனக்குக் கிடைத்தது. என்னைப் பாராட்டுவதற்காகத்தான் நீங்கள் அப்படி செய்தீர்கள் என்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை, எனினும் உங்களின் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon