மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

சென்னையில் நகைக்காகக் கல்லூரி மாணவி கொலை!

சென்னையில் நகைக்காகக் கல்லூரி மாணவி கொலை!

சென்னையில் கடந்த ஒரு வாரமாகத் தேடப்பட்டு வந்த சூளைமேட்டை சேர்ந்த டிப்ளோமா மாணவி இன்று (ஏப்ரல் 17) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலத்தைச் சேர்ந்த வேல்விழி என்ற மாணவி சென்னை சூளைமேட்டில் தங்கி டிப்ளோமா நர்சிங் பயின்றுவந்துள்ளார். இவர் கடந்த 9ஆம் தேதி முதல் மாயமானார். இதனையடுத்து சென்னை வந்த அவரது தந்தை ராஜேந்திரன், வேல்விழியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் காணாமல் போன அந்தப் பெண்ணின் மொபைல் போனைக் கொண்டு, அவர் கடைசியாகத் தொடர்பு கொண்ட நபர்களிடம் விசாரித்தபோது அஜித் குமார் என்பவர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

வேல்விழியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஜித்குமார், சடலத்தை மூட்டையில் அடைத்து கோயம்பேடு மார்கெட் பகுதியில் குப்பைகள் சேரும் இடத்தில் வீசி எறிந்ததாகவும் கூறினார்.

இந்தத் தகவலையடுத்து அஜித் குமாருடன் கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு விரைந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு காய்கறிக் குப்பைகளோடு மூட்டையில் அழுகிய நிலையில் அந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அஜித் தன் மனைவிக்குப் பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக வேல்விழியிடம் நகையைக் கேட்டுள்ளார். அதற்கு வேல்விழி தர மறுத்ததால் துப்பட்டாவால் அவரது கழுதை நெரித்துக் கொலை செய்து சலத்தை சாக்கு மூட்டையில் கட்டி அதை கோயம்பேட்டில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

முன்னதாக மார்ச் மாதம் 9ஆம் தேதியன்று சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு மாணவி அஷ்வினி, கல்லூரி வாசலில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குள் மற்றொரு மாணவி கொலை செய்யப்பட்டுள்ளது சென்னையில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon