மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

வள்ளுவர் கோட்டப் பகுதியிலுள்ள தேவாலயத்துக்கு சீல்!

வள்ளுவர் கோட்டப் பகுதியிலுள்ள தேவாலயத்துக்கு சீல்!

வள்ளுவர் கோட்டத்திற்கு அருகே அமைந்துள்ள தேவாலயத்தை சீல் வைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே எடிசன் என்பவர் தேவாலயம் நடத்திவருகிறார். இந்தத் தேவாலயம், குடியிருப்பு கட்ட அனுமதி பெற்று தேவாலயம் கட்டி இருப்பதாகவும் அதனைத் திருமண மண்டபமாகப் பயன்படுத்திவருவதாகவும் கூறி குடியிருப்பு நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தேவாலயத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து தேவாலயத்தின் உரிமையாளர் எடிசன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தேவாலயத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தேவாலயம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு கட்டத் திட்டம் பெற்று தேவாலயமாக செயல்படுகிறதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது தேவாலயத்தில் உள்ள 3, 4, 5 மாடிகளை இடிப்பதாக நீதிமன்றத்தில் தேவாலய உரிமையாளர் தெரிவித்தார்.

ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் தேவாலயமாக செயல்படுகிறது என்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் குடியிருப்பு நலச் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நீதிபதி ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது குடியிருப்பு கட்டத் திட்டம் பெற்று தேவாலயம் மற்றும் திருமண மண்டபமாகச் செயல்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள் தேவாலயத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டனர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon