மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

6 மொழி கற்பித்து அசத்தும் பள்ளி!

6 மொழி கற்பித்து அசத்தும் பள்ளி!

மத்தியப் பிரதேசத்தில் 6 மொழிகள் கற்பித்து, இரு கைகளாலும் எழுதக் கற்றுத்தந்து பள்ளி ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் புதேலா கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள பள்ளியில் 171 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் தலித் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பள்ளியில், இரு கைகளாலும் எழுதும் பயிற்சியும், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், உருது, அரபு மற்றும் ரோமன் ஆகிய 6 மொழிகளும் கற்றுத்தரப்படுகின்றன.

1999ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பி.பி.ஷர்மா வீனா வந்தினி பள்ளியைத் தொடங்கினார். இந்தியாவில் இந்த ஒரு பள்ளியில் மட்டுமே மாணவர்களுக்கு இது போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. தென் கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் இப்பள்ளியைப் பார்வையிட வருகின்றனர். இங்கு பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் இரு கைகளையும் பயன்படுத்தி எழுதுகின்றனர். அதேபோல், 3 மணி நேரத் தேர்வை ஒன்றரை மணி நேரத்தில் முடித்துவிடுகின்றனர். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் முதல் தலைமுறை கல்வியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பெற்றோர்களுக்கு கையெழுத்துகூட போடத் தெரியாத நிலையில், குழந்தைகள் இரு கைகளாலும் எழுதி, பல மொழிகள் பேசி அசத்துகின்றனர்.

ராணுவ வீரர் பி.பி.ஷர்மா, “ஒரு இதழில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இரு கைகளாலும் எழுதும் திறன் பெற்றவர் என்பதை அறிந்துகொண்டேன். இது என்னை மிகவும் கவர்ந்தது. எனது கிராமத்தில் பள்ளி ஒன்றைத் தொடங்கியபோது, எழுத்துப் பயிற்சியையும் சேர்த்துக் கொண்டேன். இந்த பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள் முதலில் எப்போதும்போல் வலது கையால் எழுதுவார்கள். அடுத்த மாதம் அவர்கள் இடது கையால் எழுதப் பயிற்சி; அதன்பிறகு, இரு கைகளையும் ஒன்றாகப் பயன்படுத்த மாணவர்கள் கற்றுக்கொள்ளப் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் 45 நிமிடத்தில் 15 நிமிடங்கள் இந்தப் பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத், லியோனார்டோ டா வின்சி, பென் ஃபிராங்க்ளின் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகிய வரலாற்றுப் பிரபலங்கள் இரு கைகளால் எழுதும் திறமையை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon