மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 19 பிப் 2020

பேசுங்கள் மோடி: மன்மோகன்

பேசுங்கள் மோடி: மன்மோகன்

கத்துவா மற்றும் உனாவ் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முன்னதாகவே பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் , பிரதமரின் மௌனம் குற்றவாளிகளைத் தப்பிக்கவைத்துவிடுமோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டுக் கொல்லப்பட்டது மற்றும் உனாவ் பகுதியில் பாரதிய ஜனதா எம்எல்ஏவால் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது கனத்த மௌனத்தை உடைத்து அதிகம் பேச வேண்டும் என்றும் மன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இன்று(ஏப்ரல் 18 ) அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில், டெல்லியில் (ஏப்ரல் 13) நடைபெற்ற அம்பேத்கர் தேசிய நினைவு இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி “ சிறுமிகள் பாலியல் வல்லுறவு விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும். குற்றவாளிகள் எந்தக் காரணத்திற்காகவும் தப்பிக்க விடப்பட மாட்டார்கள். நமது நாகரீக சமுதாயத்தில் இத்தகைய பாலியல் குற்றங்கள் என்பது வெட்கக் கேடானது” என்று பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆட்சியில் எந்தச் சம்பவத்திற்கும் நான் பேசாமல் இருப்பதாக அவர் விமர்சித்திருந்தார். தற்போது நீங்கள் எனக்கு வழங்கிய அறிவுரையை நீங்களே பின்பற்ற வேண்டும். அதிகம் பேசுங்கள் மோடி” என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் காங்கிரஸ் அரசு தலையிட்டு பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சட்டங்களை துரிதமாக அமல்படுத்தியது என்று குறிப்பிட்ட மன்மோகன், “கத்வா சிறுமி சம்பவத்தை பொறுத்தவரையில் காஷ்மீர் முதல்வர் மெஹபூபாமுஃதி காலதாமதம் செய்யாமல் இந்தச் சம்பவத்தை தனது கையில் எடுத்துக்கொண்டு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஒரு தந்தையாக கத்துவா சிறுமி குறித்த செய்தியை படித்தபோது மிகுந்த துன்பத்திற்கு ஆளானேன். குறிப்பாக அச்சிறுமியின் தந்தை ”எனது மகளுக்கு யார் முஸ்லிம், இந்து என்றே தெரியாது. வலது கை, இடது கை எது என்றே அவளுக்குத் தெரியாது” என்று உருக்கமாகக் கூறியிருப்பது. இந்த கொடுர சம்பவத்திற்கு பாஜக இனச்சாயம் பூச முயல்கிறது. வகுப்புவாதத்தை வளர்த்தெடுக்க முயற்சிப்பது பெரும் அச்சத்தை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்குப்பிரச்சினை, குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு, மற்றும் முஸ்லிம்கள், தலித்களின் மீதான பிரச்சினையில் பாஜக ஆளும் மாநில அரசுகள் கண்களை கட்டிக்கொண்டு செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய மன்மோகன், இந்த மூன்று விஷயங்கள் 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக எதிரொலிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள், அதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பொறுப்பாகும். சட்ட ஒழுங்கு பிரச்சனையை நேர்மையாகக் கையாள மத்திய பாஜக அரசு மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர வேண்டும். தலித்கள் மற்றும் பெண்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon