மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 18 ஏப் 2018

பேராசிரியை வாக்குமூலம்: மேலும் இருவர் சிக்கினர்!

பேராசிரியை வாக்குமூலம்: மேலும் இருவர் சிக்கினர்!

நீதிமன்றக் காவலில் இருக்கும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 பேர் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கத் தூண்டுதலாக இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக நேற்று முன் தினம் (ஏப்ரல் 16) கைது செய்யப்பட்டார். நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று மாலை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நிர்மலா தேவியை ஏப்ரல் 28ஆம் தேதி வரை 12 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பேராசிரியை நிர்மலாவிடம் விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராஜராஜன், கூடுதல் கண்காணிப்பாளர் மதி, துணை கண்காணிப்பாளர் தனபால், ஆய்வாளர்கள் பாலமுருகன், மயில் ஆகியோர் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஆனால் உதவி பேராசிரியை நிர்மலா தான் பேசியதைத் தவறாக மாணவிகள் புரிந்துகொண்டனர் எனத் திரும்பத் திரும்ப ஒரே பதிலையே கூறியுள்ளார். தான் குறிப்பிட்ட பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் யார் என்பதைக் கூறவும் அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுவரும் திருச்சுழியைச் சேர்ந்த கருப்பசாமியும், துறைத் தலைவராகப் பணியாற்றும் மதுரை முருகனும் தன்னை இந்தச் செயலுக்குத் தூண்டியதாக போலீஸாரிடம் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி, “அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இளங்கலை முடித்தேன். அருப்புக்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முடித்தேன். அஞ்சல் மூலம் எம்.பில் படித்தேன். சென்னை பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்தபோது கருப்பசாமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதே போல் துறைத் தலைவர் முருகனுடனும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தினால் பல காரியங்களை சாதிக்கலாம் என ஆசையை ஏற்படுத்தினர். எனவே, நான் மாணவிகளிடம் அதுகுறித்துப் பேசினேன். கல்லூரி நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட மோதலால், வாட்ஸ்அப் ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியைக் கைப்பற்ற, பேராசிரியை நிர்மலாதேவி இதுபோன்று மாணவிகளைத் தூண்டி இழிவான செயல்களை செய்துவந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கருப்பசாமியையும், முருகனையும் போலீஸார் தேடிச் சென்றபோது அவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறவுள்ளது. பேராசிரியை நிர்மலாதேவியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்பேசிகளை வைத்தும் போலீஸார் விசாரணையைத் தொடங்க உள்ளனர். போலீஸார் கைது செய்யச் சென்றபோது 5 மணி நேரம் அவர் கதவை திறக்காமல் இருந்தபோது, யாரிடம் பேசினார் என்பதை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு, அவர் தொடர்புடைய ஆவணங்களைச் சேகரிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon