மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 4 ஜூலை 2020

குழந்தைகளின் காது கேளாமை: கண்டறிய 162 மையங்கள்!

குழந்தைகளின் காது கேளாமை: கண்டறிய 162 மையங்கள்!

"குழந்தைகளின் காது கேளாமையைக் கண்டறியத் தமிழ்நாடு முழுவதும் 162 மையங்கள் விரைவில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் காதுவால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் துணை பாகங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காதுவால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட 126 பயனாளிகளுக்கு ரூ.62 லட்சத்து 47 ஆயிரம் செலவிலான துணை பாகங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இது குறித்து, "ஆறு வயதிற்குட்பட்ட காது கேளாமை நரம்பியல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதுவால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைகள் பேசவும், கேட்கவும் இயலும். இத்திட்டத்தில் 2,968 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 241.76 கோடி ரூபாய் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காது நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பயனாளிகளின் உடல் நலம் குறித்து கண்காணிக்கும் பொருட்டுத் தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. பிறந்த குழந்தையின் காது கேளாமையைக் கண்டறியும் நவீன பரிசோதனைக் கருவியான ஒலி ஒலியியல் கருவியைப் பயன்படுத்திக் கண்டறிய திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் இதை 162 மையங்களில் முன்னோடித் திட்டமாக விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 6,125 நபர்களுக்குச் சிறப்பு அறுவை சிகிச்சைகள் ரூ.442.43 கோடியில் செய்யப்பட்டுள்ளன" என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon