மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 5 ஜுன் 2020

ஆதாரை எதிர்க்கும் கூகுள்!

ஆதாரை எதிர்க்கும் கூகுள்!

ஆதார் திட்டத்துக்கு எதிராகக் கூகுள் நிறுவனமும் ஸ்மார்ட் கார்டு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன. ஆதாரால் இந்நிறுவனங்கள் தங்களது தொழிலில் பின்னடைவைச் சந்திக்கும் அச்சத்திலேயே இதுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஆதார் தரப்பு வாதிடுகிறது.

ஆதார் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியத் தனிநபர் அடையாள ஆணையம் (UIDA) உச்ச நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி கூகுள் நிறுவனமும், ஸ்மார்ட் கார்டு நிறுவனங்களும் ஆதார் திட்டம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்புவதாகவும், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் முறையிட்டுள்ளது. இந்தியத் தனிநபர் அடையாள ஆணையம் சார்பாக ஆஜராகிய மூத்த வழக்குரைஞர் ராகேஷ் டிவேடி, இந்தியாவின் தலைமை நிதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வாதிடுகையில், “ஆதார் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டால் ஸ்மார்ட் கார்டு நிறுவனங்களின் தொழில் பாதிக்கும். கூகுள் நிறுவனத்துக்கும் இதில் விருப்பமில்லை. எனவே இந்நிறுவனங்கள் ஆதார் வெற்றியடைவதை விரும்பவில்லை” என்றார்.

ஆதாரில் மக்களின் தனிநபர் அடையாள விவரங்கள் பாதுகாப்பானதாக இருக்குமா, என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு, “ஆதாரில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. ’நான் நான் தான்’ என்று ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வழிமுறையில்தான் ஆதார் செயல்படுகிறது. ஆதாருக்கு எதிராக ஒரு அச்சம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதார் விவரங்கள் எப்போது வேண்டுமானாலும் திருடப்படலாம் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால் ஆதார் மிகச் சரியான வகையில் பாதுகாப்பாக உள்ளது. அது இணையதளத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே அதன் விவரங்களை ஆன்லைன் வாயிலாகத் திருடிவிட முடியாது. ஒருவரின் ஆதார் விவரங்களை வேறு எவராலும் அலச இயலாது” என்றார்.

மத்திய அரசானது தனது அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதாரைக் கட்டாயமாக்கி வரும் சூழலில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஆதார் திட்டத்தின் வாயிலாக பண மோசடி, வங்கி மோசடி, வருமான வரி ஏய்ப்பு, தீவிரவாதம் உள்ளிட்டவற்றைத் தடுக்க முடியும் என்று வழக்கு ஒன்றில் மத்திய அரசின் வாதத்துக்கு ஆதாரை வைத்துக்கொண்டு மட்டும் வங்கி மோசடிகளைத் தடுத்துவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியது நினைவுகூரத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon