மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 12 ஜூலை 2020

டெல்லிக்குத் திரும்பிவிடுங்கள்!

டெல்லிக்குத் திரும்பிவிடுங்கள்!

பேராசிரியை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தினகரன், ஆளுநரைத் திரும்பப்பெறவில்லை என்றால் அந்தப் பதவிக்கே இழுக்கு என்றும் விமர்சித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (ஏப்ரல் 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பேராசிரியை விவகாரத்தைப் பொறுத்தவரை தொலைபேசி உரையாடலிலேயே ஆளுநரின் பெயரைத்தான் குறிப்பிடுகிறார். அப்படியிருக்கும்போது, ஆளுநரே அவசர அவசரமாக விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனக் கூறுகிறார். ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடவேண்டும்?

நீதிமன்றக் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் உண்மை தெரியும். யாரே பெரிய மனிதருக்காகத்தான் பேராசிரியை செயல்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் துணைவேந்தரை உடன் வைத்துக்கொண்டு ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுவது சரியல்ல. பெண் பத்திரிகையாளர் ஒருவரை ‘என் பேத்தி வயது’ எனக் கூறி கன்னத்தில் தட்டுவது போன்ற செயல்கள் கேவலமாக உள்ளது.

மத்திய அரசின் பிரதிநிதி, ஆளுநர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? தமிழக மக்கள் தங்களுக்கு ஆதரவாக இல்லை என்பதால், தமிழகத்தைப் பாலைவனமாக மாற்றி தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். அவர்களுக்கு ஆதரவான மாநிலங்களில் உள்ள மக்களை இங்கு குடியமர்த்தி தங்களுக்கு வாக்களிக்கவைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதா என்று தெரியவில்லை.

ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் அது ஆளுநர் பதவிக்கே இழுக்கு. அந்தப் பதவியின் கண்ணியம் கருதி அவர் திரும்பிச்செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், ஆளுநர் தொடர்பாக தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் தன்னுடைய தர்பாரை ஆளுநர் நடத்தியுள்ளார். இந்தத் தர்பார் வேலையெல்லாம் தமிழகத்தில் எடுபடாது.

ஆளுநரின் அளவுக்கதிகமான பதட்டமும், அதனைத் தொடர்ந்து விசாரணை ஆணைய அறிவிப்பும், பேட்டியும், பேட்டியின் முடிவில் அவர் நடந்துகொண்ட விதமும் என இவை எதுவுமே முறையானதாக, நெறியானதாகத் தோன்றவில்லை.

ஆளுநர் தன் எல்லைகளை அளவுக்கதிகமாகவே மீறிக் கொண்டிருக்கிறார். நிர்மலா தேவியின் தொலைபேசி பேச்சு என்பது மிகத் தெளிவாக, குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய ஒன்று என்பதை உணர்த்துகிறது.

ஆளுநரின் வரம்பு மீறிய செயல் என்பது மிகத் தவறான முன்னுதாரணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விசாரணை அமைப்புகளே நம்பத் தகுந்தது அல்ல என்ற கருத்து நிலவிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆளுநரின் ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது நம்பிக்கை உடையதாக இருக்குமா? அல்லது இது என்ன சாதிக்கப்போகிறது? மேலும், இது சுயாட்சித் தத்துவத்தை நசுக்குவதாகும்.

அதுவும் தனது பேட்டியின் முடிவில் பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் தன் மாண்பை மீறி நடந்துகொண்ட விதம் கடும் கண்டனத்திற்குரியது. இது போன்று தனிப்பட்ட நடவடிக்கைகளிலும், மாநில அதிகாரத்திலும் எல்லை மீறி அவர் நடந்துகொள்ளும் விதமும் ஆட்சேபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். ஆளுநர் பதவிக்கான மாண்பைக் காப்பற்ற தமிழக ஆளுநர் தாமாகவே டெல்லி திரும்பிட வேண்டும்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon