மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

பிசியோதெரபி மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பிசியோதெரபி மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பிசியோதெரபி மருத்துவத்திற்குத் தனி கவுன்சில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று(ஏப்ரல் 18) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், காளை மாடு சிலை அருகே, பிசியோதெரபி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு உடனடியாக பிசியோதெரபி மருத்துவத்திற்குத் தனி கவுன்சில் அமைக்க வேண்டும். பிசியோதெரபி மாணவர் சேர்க்கையின் போது தவறான செய்திகளை வெளியிடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிசியோதெரபி மருத்துவமனைகளில் அலோபதி மருத்துவர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி மருத்துவர்கள் நியமிக்கப்படவேண்டும். மேலும் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு முறையான அங்கீகாரம் அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து போராட்டக்காரர்கள் தெரிவிப்பதாவது, "இந்தியாவில் பிசியோதெரபி கல்வி தொடங்கப்பட்டு 64 ஆண்டுகள் கடந்துவிட்டது. இருந்தபோதும் பிசியோதெரபி மருத்துவ கல்வியை நெறிப்படுத்த மத்தியிலோ, மாநிலத்திலோ பிசியோதெரபி கவுன்சில் இதுவரை அமைக்கப்படவில்லை.

டெல்லி, மாகாராஸ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மாநில அளவிலான பிசியோதெரபி கவுன்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2009 ஆண்டே சட்டமன்ற கூட்டத்தொடரில் பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இதுவரை தமிழகத்தில் பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கப்படவில்லை.

இதனால் நாளுக்கு நாள் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருவதால், போலி பிசியோதெரபி மருத்துவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களால் பொது மக்களின் உடல் நலம் கேள்விக் குறியாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி, 10,000 பேருக்கு ஒரு பிசியோதெரபி மருத்துவர் என்ற முறையில் பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தமிழக மக்கள் தொகைக்கு அரசு சார்பில் 134 பிசியோதெரபி மருத்துவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் பிசியோதெரபி கவுன்சில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்கள்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon