மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 21 செப் 2020

ஏடிஎம் பணத் தட்டுப்பாடு எப்போது தீரும்?

ஏடிஎம் பணத் தட்டுப்பாடு எப்போது தீரும்?

நாட்டில் ரொக்கப் பணத்திற்கான தேவை வழக்கத்தை விட கடும் உயர்வைச் சந்தித்துள்ளதால், அச்சடிக்கப்படும் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை ஐந்து மடங்கு அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளதாக ஏப்ரல் 17ஆம் தேதியன்று டெல்லியில் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் ஏடிஎம்களில் ரொக்கத் தட்டுப்பாடு நிலவி வருவது குறித்து புகார்கள் வந்த நிலையில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேவை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், ரொக்கப் பணத்தின் விநியோகத்தை அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். உதாரணமாக, ஒரு நாளைக்கு நாங்கள் அச்சடிக்கும் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 500 கோடியாகும். இதை ஐந்து மடங்கு அதிகமாக அச்சடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வெகு விரைவில் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு நாளுக்கு 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை நாங்கள் விநியோகிக்க உள்ளோம். ஒரு மாதத்தில் 70,000 முதல் 75,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டிருக்கும். ரொக்கப் பணத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேவையை இந்த நோட்டுகளால் பூர்த்தி செய்யமுடியும்” என்று அவர் கூறினார்.

நாட்டில் ரொக்கத் தட்டுப்பாடு இல்லை எனவும், தற்போது 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் புழக்கத்தில் உள்ளதாகவும், இது பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த பணத்தை விட அதிகம் எனவும் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “கூடுதலான தேவையைச் சந்திக்க நாங்கள் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கத்தை இருப்பில் வைத்திருப்போம். கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள தேவையைச் சந்திக்கக் கூடுதலான ரொக்கத்தை நாங்கள் விநியோகித்துள்ளோம். எங்களிடம் இருப்பில் இன்னும் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் இருக்கிறது” என்று கூறினார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon