மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

அமைச்சர்கள் பார்க்கவில்லை!

அமைச்சர்கள் பார்க்கவில்லை!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக தான் கூறவில்லை என்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன மோகன ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் அளித்த விளக்கத்தில், மருத்துவமனையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்ததாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர், ராமமோகன் ராவ் கூறியது உண்மைக்குப் புறம்பானதாகும் என்று கூறியிருந்தார். மேலும் பன்னீர்செல்வமும் தான் பார்க்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் முன்பு இன்று (ஏப்ரல் 18) ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமமோகன ராவ், "மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரஸ்ட்' வந்தபோது அமைச்சர்கள், நான் உள்பட அங்கு யாரும் இல்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரஸ்ட் வந்தபோது நாங்கள் அங்கு இருந்ததாக நான் கூறியதாக ஒரு தவறான செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது. தகவல் தெரிந்த பின்புதான் நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், "ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அமைச்சர்கள் அவரை சந்தித்ததாக நான் கூறியதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அமைச்சர்கள் ஜெயலலிதாவைப் பார்த்தார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஜெயலலிதா சில அமைச்சர்களைக் கூப்பிட்டார் என்று மருத்துவமனையில் இருந்த சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்" என்றும் குறிப்பிட்ட ராமமோகன ராவ், நான் 30வருடங்கள் தமிழ்நாட்டில் வேலை பார்த்து வருகிறேன். எனவே தயவுசெய்து மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளுங்கள். விசாரணை ஆணையத்தில் அனுமதி பெற்று நான் உங்களுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon