மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

வைகோ மீது பாட்டில் வீச்சு: கண்டனம்!

வைகோ மீது பாட்டில் வீச்சு:  கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நோக்கி பாட்டில் வீசப்பட்ட சம்பவத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக நடைபயணத்தை நடத்தி முடித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அடுத்தகட்டமாக நேற்று கோவில்பட்டியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். எட்டயபுரம், விளாத்திக்குளம் உள்ளிட்ட இடங்களில் பேசி முடித்த பிறகு குளத்தூர் என்னும் இடத்தில் வாகனத்தில் நின்றபடி ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார் வைகோ. அப்போது அவரை நோக்கி மதுபாட்டில் வீசப்பட்டது. எனினும், அருகில் இருந்த தொண்டர்படை வாகனத்தில் பட்டு பாட்டில் கீழே விழுந்தது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அருமைச் சகோதரர் வைகோ அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் வாகன சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், குளத்தூரில் நேற்று (ஏப்.17) அவர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி பாட்டில்கள் வீசப்பட்டுள்ளன. சில நாள்களுக்கு முன் பும், தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் மதுரையருகே அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.தொடர்ந்து அவர்மீது குறி வைப்பவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ள வீரமணி, இவற்றுக்கு யார் காரணமானாலும், இந்தக் கோழைத்தனமான வன்முறையைக் கண்டிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வைகோ அந்த காலத்திலிருந்து பல வருடங்களாகப் போராட்டங்கள் நடத்தி வருகிறார். தற்போது ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அவரை நோக்கி பாட்டில் வீசுவது உள்ளிட்ட சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும். பெரியவர் வைகோ அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon