மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

நிர்மலா உயிருக்கு ஆபத்து: ராமதாஸ்

நிர்மலா உயிருக்கு ஆபத்து: ராமதாஸ்

மாணவிகளுக்கு பாலியல் வற்புறுத்தல் அளித்த விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்கச் சதி நடைபெறுவதாகக் கூறியுள்ள ராமதாஸ், பேராசிரியை நிர்மலா தேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (ஏப்ரல் 18) வெளியிட்ட அறிக்கையில், “பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காக சில மாணவிகளுக்கு வலைவீசப்பட்டது தொடர்பான விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பும், அதில் அவர் அளித்த விளக்கங்களும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு மாறாக அதிகரித்துள்ளன. எந்த வகையிலும் அதிகாரமற்ற விஷயத்தில் ஆளுநர் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுதான் நானும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்திவருகிறோம். இந்த விவகாரத்தில் பயனாளி ஆளுநர்தான் என்று எந்தத் தலைவரும் குற்றம்சாட்டவில்லை.

இத்தகைய சூழலில், செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவை எளிதாகக் கடந்து போயிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல், “எனக்கு 78 வயதாகிவிட்டது. எனக்கு பேரன், பேத்திகள் மட்டுமின்றி, கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்” என்று பதிலளித்து சுயபச்சாதாபம் தேடும் முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டது, எதற்காக இந்த நாடகம் என்ற ஐயத்தைத்தான் அனைவரிடமும் ஏற்படுத்தியுள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழக அரசு மீது 24 ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய 206 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை பாமக வழங்கியுள்ளது. காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகங்களைக் கண்டித்து வரலாறு காணாத போராட்டங்களைத் தமிழகம் எதிர்கொண்டுவருகிறது. இது குறித்தெல்லாம் ஆளுநர் விளக்கம் கொடுக்க முயற்சி எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள ராமதாஸ், “மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பெரிய மனிதர்கள் யார் என்ற சர்ச்சை அதிகரித்துவரும் நிலையில், அது குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கமளிக்க வேண்டிய தேவை என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இது பல்கலைக்கழகம் சார்ந்த விஷயமல்ல. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்கு பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த விஷயமாகும்.

இது ஒரு தனியார் தன்னாட்சிக் கல்லூரியின் மாணவிகளைச் சீரழிக்க அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நடத்திய நாடகம். இதற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தனியார் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம், தேர்வு மதிப்பீடு ஆகியவற்றில் மட்டும்தான் பல்கலைக்கழகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக, இதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகளில் தலையிட பல்கலைக்கழக துணைவேந்தருக்கோ, வேந்தரான ஆளுநருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அது மட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் பதவிகளில் உள்ள சிலர் அல்லது அவர்களின் அதிகார மற்றும் பதவித் தேவைகளை நிறைவேற்றும் நிலையில் உள்ளவர்களுக்காகத்தான் அப்பாவி மாணவிகளை வேட்டையாட முயற்சிகள் நடந்துள்ளன. இதன் பின்னணியில் பல்கலைக்கழகம்தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

அந்த வகையில் பல்கலைக்கழக உயரதிகாரிகள், துணைவேந்தர், வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர் ஆகியோர்தான் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் காமராஜர் பல்கலைக்கழக வேந்தர் பன்வரிலால் புரோஹித், துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா ஆகியோர் நீதிபதிகளாகச் செயல்பட்டு விசாரணைக்கு ஆணையிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது சட்டத்தையும் நீதியையும் கொச்சைப்படுத்தும் செயலாகவே அமையும்” என்று விமர்சித்துள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியிடமிருந்து 3 செல்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பல்வேறு பெரிய மனிதர்களைத் தொடர்புகொண்டதற்கான ஆதாரங்களும், 60க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், “இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல பெரிய மனிதர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட நிர்மலா தேவி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு துணிச்சல் உண்டா என்று சவால் விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்துதான் நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை தலைமை இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.

இது குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியே தவிர, அவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

உயர் பதவியில் உள்ள ஒருவர் இந்த விஷயத்தில் மோசமானவர் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்களே குற்றம்சாட்டுகின்றனர். உண்மை அவ்வாறு இருக்கும்போது நிர்மலாதேவியை பலிகடாவாக்கிவிட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதிதான் இதுவாகும். இந்தச் சதித்திட்டத்தில் நிர்மலாதேவியின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, “இவ்விஷயத்தில் தம் மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில்தான் ஆளுநர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது” என்று கூறியுள்ள ராமதாஸ், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon