மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஏப் 2018

டிராவில் முடிந்ததா சினிமா முத்தரப்புக் கூட்டம்?

டிராவில் முடிந்ததா சினிமா முத்தரப்புக் கூட்டம்?

இராமானுஜம்

தமிழ் சினிமா மீண்டும் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கத் தயாராகிவிட்டது. நேற்று காலை 11.30 மணிக்குத் தொடங்கிய முத்தரப்புக் கூட்டம் சுமார் 12 மணிநேரம் நடைபெற்று எந்த தரப்புக்கும் தோல்வி இன்றி சமநிலையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை அனைத்தும் அரசாலும், தயாரிப்பாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடினமாகக் கருதப்பட்ட, அனுமதிக்க வே முடியாது என திரையரங்கு உரிமையாளர்களால் நிராகரிக்கப்பட்டுவந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கியமான கோரிக்கைகள் அனைத்தும் எதிர்ப்பு இன்றித் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

திரைத்துறை வேலைநிறுத்தத்தின் இறுதியில் அரசு தலையீட்டில்இப்படித்தான் முடியும் என்பது திரைத்துறை வல்லுனர்கள் கணித்த விஷயம்தான்.

வரலாறு காணாத வேலைநிறுத்தத்தின் பின்னணியும் போக்கும்

தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் துவக்கியது சரியானதா, டிஜிட்டல் நிறுவனங்களிடம் பேசி முடிவு காணலாமே என்ற விமர்சனம் தொடக்கத்தில்எழுந்தது.

தியேட்டர்காரர்களும், டிஜிட்டல்நிறுவனங்களும் என்னதான் செய்வார்கள் பார்த்துவிடுவோம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனித்து ஒற்றுமை உணர்வுடன் போராடினார்கள்.

தங்களால்முடிந்த அளவு இந்தப் போராட்டத்தில் இருக்கும் உண்மைத்தன்மையைப் பொது வெளியில் விவாதப் பொருளாக்கியதுதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

அரசின் கவனத்தை ஈர்க்கவும், தயாரிப்பாளர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும் திரைப்பட துறை சார்ந்த பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

அப்போதுதான் தமிழக அரசின் கவனம் திரைப்படத் துறை வேலை நிறுத்தத்தின்மீது விழும் என்பது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திட்டமாக இருந்தது.

பெப்சி அமைப்பு இதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து உதவியிருக்கிறது. முதலாளிகள் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் நடத்தியது சினிமா வரலாற்றில் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. தமிழக அரசு இதை கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர்ந்தது

அமைச்சர்களிடத்தில் பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டபோது “விஷாலே பெரிய ஆள்தானே.. அவரே தீர்த்து வைப்பார்…” என்று கிண்டலடித்தார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கம்தியேட்டர்களை சிண்டிகேட் வடிவில் குறிப்பிட்ட சில நபர்கள் கையில் வைத்திருக்கும் தியேட்டர் உரிமையாளர்களை வழிக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து, கடைசியில் எப்படியாவது ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவர எண்ணியது.

இதேபோல்தான் தியேட்டர் உரிமையாளர்களும். கடந்த 47 நாட்களாகத் தியேட்டரில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்குக்கூடப் பணம் வசூலாகாமல் தவித்துப் போனார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஒரு கட்டத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். போராட்டக் கொதிநிலையில் இருக்கும் தமிழகத்தில் சினிமா ஸ்ட்ரைக் காரணமாக அரசின் வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் வேலையின்மை, தொழில் அமைதியின்மை நிலவுவதால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முத்தரப்புக் கூட்டம் நேற்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் சுப்பிரமணியின் பங்களிப்பு

வழக்கம் போலவே திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் என்று இல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். கடந்த 47 நாட்களாக எதிரும் புதிருமாகக் குற்றச்சாட்டுகளை கூறிவந்த இரு தரப்பிலும் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.

முதல் 30 நிமிடங்கள் கடுமையான வாக்குவாதங்கள் எழுந்தன. வழக்கம் போல திருப்பூர் சுப்பிரமணி இரு தரப்பையும் சமாதானப் படுத்தும் வேலையை தொடங்கியபோதே இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தும் தலைமைப் பொறுப்பைக் கையிலெடுத்தார். அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது அனுபவம் மிகுந்த ஆளுமையால் முன்வைத்துத் திரையரங்க உரிமையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்படப் பணியாற்றினார் சுப்பிரமணி.

விஷாலின் ராஜதந்திரம்

தயாரிப்பாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில், தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கேயாரைப் பேச்சுவார்த்தையில் முன்னிலைப்படுத்தியது விஷாலின் ராஜதந்திரம். திருப்பூர் சுப்பிரமணி போன்றே அனுபவம், ஆளுமை, எதிராளியை வயப்படுத்தும் ஆற்றல் மிக்க கேயார், திருப்பூர் சுப்பிரமணியின் உதவியுடன் தயாரிப்பாளர்கள் சங்கக் கோரிக்கை அனைத்தும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படும் பணியைச் செய்தார்.

க்யூப் நிறுவனம் ஏற்கெனவே தயாரிப்பாளர்களுடன் தனித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஒப்புக்கொண்ட அதே அளவுக்கான VPF கட்டணக் குறைப்பை இப்போது தமிழக அரசின் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டுள்ளது

இதுவரையிலும் வாரத்திற்கு 28 காட்சிகளுக்கு ஒரு தியேட்டருக்கு 9,000 ரூபாயை ஒளிபரப்பும் கட்டணமாக வசூலித்துக்கொண்டிருந்த க்யூப் நிறுவனம், இனிமேல் 5,000 ரூபாய் மட்டுமே வசூலிக்கும்.

இதேபோல் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்கிற பிரிவில் ஒரு திரைப்படத்திற்கு 20,000 ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த க்யூப் நிறுவனம் இப்போது 10,000 ரூபாயை வாங்கிக்கொள்ளச் சம்மதித்திருக்கிறது.

அதுவும் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டுமே. அதற்கடுத்து வேறு டிஜிட்டல் நிறுவனங்களின் மூலமாக தியேட்டர்களுக்குத் தங்களது தயாரிப்புகளை கொடுப்பது குறித்து தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் பேசி முடித்துக்கொள்ளலாம் என்று கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

எனவே இந்த 6 மாத காலம் மட்டுமே க்யூப் தனது ஆதிக்கத்தை தமிழகத்தின் தியேட்டர்களில் செலுத்த முடியும்.

திரையரங்குகள் ஒப்புக்கொண்ட கோரிக்கைகள்

தியேட்டர் கட்டணத்தை அனைத்துப் படங்களுக்கும் ஒரே மாதிரியாக வைத்துக்கொள்ளாமல் பட்ஜெட்டை மனதில் கொண்டு சில படங்களுக்குக் கட்டணத்தைக் குறைத்து வாங்க தியேட்டர்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

இதனால் மீடியம் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் படங்களை திரையிடும்போது அவற்றுக்கான தியேட்டர் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்படும்.

இதனால் சின்ன பட்ஜெட் படங்களைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

தியேட்டர்களில் செய்யப்படும் முன் பதிவுக் கட்டணம் இதுவரையிலும் 35 ரூபாய்வரையிலும் இருந்துவந்தது.

இனிமேல் அது வெறும் 4 ரூபாய் மட்டுமே என்பதற்கு தியேட்டர்காரர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்களாம்.

அதிலும் முன் பதிவுக்கான இணையத்தளத்தை தயாரிப்பாளர் சங்கமே அரசின் மேற்பார்வையில் செயல்படுத்தித்தரப் போகிறதாம். இதனால் தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்திற்கான செலவு பெருமளவு குறையும்.

தியேட்டர் டிக்கெட் விற்பனை முழுவதையும் கணிணிமயமாக்கவும் தியேட்டர் அதிபர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் வரும் ஜூன் முதல் தேதி முதல் அமலாகுமாம்.

இதனால் ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் அன்றன்றைக்கே தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்துவிடும்.

ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலும் தெரிந்துவிடுவதால் பெரிய நடிகர்களுக்குத் தரப்படும் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் ஒரு வகையில் நிலைநிறுத்தப்படும். இதனால் சமச் சீரான சம்பளம் நடிகர்களுக்குத் தரப்பட்டு தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமை குறையும்.

உண்மையில் யாருக்கு வெற்றி?

நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகள் பற்றி இன்று மாலைகூடவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அதன் பின்பு புதிய திரைப்படங்களை எப்போது திரைக்குக் கொண்டுவருவது, படப்பிடிப்புகளைத் துவக்குவது எப்போது என்பது பற்றியெல்லாம் முடிவெடுத்து அறிவிப்பார்கள்.

இதுவரையிலான இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்தான். அவருடைய சங்கச் செயல்பாடுகளில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விஷால் இல்லாமல் வேறு யாராவது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக இப்போது இருந்திருந்தால் நிச்சயமாக இந்த அளவுக்குத் திட்டமிட்டு, புத்திசாலித்தனமாக தியேட்டர் அதிபர்களையும், கியூப் நிறுவனத்தாரையும் அரசின் முன் உட்கார வைத்து அவர்களை சமரசத்துக்குக் கொண்டுவந்திருக்க முடியாது.

தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தலைவலியாய் இருந்த முக்கியமான பல விஷயங்களை விஷாலும் அவரது குழுவினரும் தங்களது ராஜதந்திரத்தால் ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.

தங்களுக்குள் பிரச்சினையை முடித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டது. அதனைத் தங்களுக்கு சாதகமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திருப்பூர் சுப்பிரமணி மூலம் நிறைவேற்றிகொண்டனர். டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு ஆதரவாகப் பேசிய திருப்பூர் சுப்பிரமணியே டிஜிட்டல் கட்டணக் குறைப்புக்கு ஆதரவாகப் பேசினார். கட்டணத்தைக் குறைக்க அரசு சொல்லியும் கேட்காதவர்கள் திருப்பூர் சுப்பிரமணி சொன்னதும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆக மொத்தத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் தோல்வி இன்றி டிராவில் முடிந்ததாக கூறப்பட்டாலும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. என்றுதான் கூற வேண்டி உள்ளது.

அது எப்படி? நாளைக் காலை 7 மணிக்கு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

புதன் 18 ஏப் 2018