மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஆளுநருக்கு எதிராக போராட்டம்!

ஆளுநருக்கு எதிராக போராட்டம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, இன்று (ஏப்ரல் 18) திமுக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக ஆளுநருக்கு எதிராக புதுச்சேரியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைத் திரும்பப் பெறக்கோரி, இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, கிண்டி ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்வதாக இருந்தது.பேரணியைத் தடுக்க, காவல்துறையின் சார்பில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தாண்டி, சிலர் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் உரிமைகளில் ஆளுநர் பன்வாரிலால் தலையிடுவதைக் கண்டித்தும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுகவினர் கோஷமிட்டனர். இதனையடுத்து, பேரணியில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தது காவல்துறை.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்வதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி ஆசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாநில அரசு மாற்றியுள்ளது என்றும், அதன்பின்னரும் அதுகுறித்து ஆளுநர் நியமித்துள்ள கமிஷன் விசாரிக்கும் என ஆணையிடுவது சர்வாதிகாரப் போக்கு என்றும், செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மா.சுப்பிரமணியன்.

”எப்போதும் யாரும் செய்திடாத ஒன்றைச் செய்துள்ளார் தமிழக ஆளுநர். பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். சிபிஐ விசாரணை வேண்டுமென்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தபோது, அதனை மறுதலித்துள்ளார். அது மட்டுமல்லாமல், இதனை விசாரிக்க நான் அமைத்த குழுவே போதும் என்று சர்வாதிகாரப்போக்கைக் கடைபிடிக்கிறார். இப்படிப்பட்ட கவர்னர் தமிழகத்திற்குத் தேவையில்லை” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதிகார வரம்புகளையும் விதிமுறைகளையும் சட்டத்தையும், பன்வாரிலால் மீறி வருவதாகக் கூறினார் சுப்பிரமணியன். மேலும், தமிழகப் பெண்களின் கற்புக்குக் கேள்விக்குறியாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது. ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வேல்முருகன். அப்போது, தமிழக சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி ஆசிரியர் நிர்மலா தேவி கைது நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ”இந்த வழக்கில் நியாயமான முறையில் விசாரணை செய்ய வேண்டும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட அனைத்து பதவிகளையும் ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

மேலும், நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கிள்ளியதற்காக, அந்தப் பெண்ணிடம் 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவெண்டுமென்றும் தெரிவித்தார். ”இனி, தமிழக ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் போராட்டம் வெடிக்கும். மத்திய அரசு தமிழக ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இனி இவரது அழைப்பை தமிழக அரசு அதிகாரிகள் ஏற்கக்கூடாது” என்று கூறினார் வேல்முருகன்.

இதேபோன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலாலைக் கண்டித்து புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகத்தினர் சார்பாகப் போராட்டம் நடைபெற்றது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon