மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

பணத் தட்டுப்பாட்டுக்கு இதுதான் காரணமா?

பணத் தட்டுப்பாட்டுக்கு இதுதான் காரணமா?

சமீபமாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் எந்திரங்கள் பணமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறைக்கப்பட்டதாலேயே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

டெல்லி, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், சட்டிஷ்கர், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்னமும் ஏடிஎம் எந்திரங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோல நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியில் ஏற்பட்ட மந்தம் காரணமாகவே இத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாசிக்கில் உள்ள கரன்சி நோட்டு அச்சிடும் ஆலையில் ரூ.500, ரூ.200, ரூ,100 மற்றும் ரூ.20 நோட்டுகளின் அச்சிடும் அளவு 44 சதவிகிதம் குறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரூ.200, ரூ.100 மற்றும் ரூ.20 நோட்டுகளும் இந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.500 நோட்டுகள் அச்சிடும் பணி சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்திலேயே நிறுத்தப்பட்டது. ஏனெனில், 2017-18 நிதியாண்டில் நாசிக் நோட்டு அச்சிடும் ஆலையில் மொத்தம் 1,800 மில்லியன் எண்ணிக்கையிலான ரூபாய் தாள்களை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. அந்த இலக்கு எட்டப்பட்டவுடன் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, புதிய வடிவிலான ரூ,100 மற்றும் ரூ.20 தாள்களை அச்சிடும் நோக்கில் பழைய நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

ரூ.200 நோட்டுகளை அச்சிடுவதற்கான பணியானது நாசிக்கிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள தேவோஸ் நோட்டு அச்சிடும் ஆலைக்கு மாற்றி வழங்கப்பட்டுள்ளது. எனவே நாசிக்கில் ரூ.200 நோட்டு அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாசிக்கில் ரூ.50 மற்றும் ரூ.10 நோட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டு வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாசிக் ஆலையில் தினசரி உற்பத்தி (அச்சு) அளவு 1.8 கோடியிலிருந்து 1 கோடியாகக் குறைந்துள்ளது. இதுபோல, ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த விசயத்தில் ரிசர்வ் வங்கி உடனடியாகத் தலையிட்டு ரூபாய் நோட்டுகள் அச்சிடுதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றைத் துரிதப்படுத்தினால் மட்டுமே பணத் தட்டுப்பாட்டைத் தீர்க்க முடியும். இல்லையெனில் பணமதிப்பழிப்பு சமயத்தில் மக்கள் அன்றாடச் செலவுகளுக்கே பணமில்லாமல் துன்புற்ற அதே சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon