மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: பத்திரிகையாளர் அமைப்புகள்

ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: பத்திரிகையாளர் அமைப்புகள்

தமிழக ஆளுநர் நேற்று (ஏப்ரல் 17) ஆளுநர் மாளிகையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதியில் பெண் பத்திரிகையாளரிடம் நடந்துகொண்ட விதம் பற்றி, பத்திரிகையாளர்களிடம் இருந்தும் பத்திரிகையாளர் அமைப்புகளிடம் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

அருப்புக் கோட்டை உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளுடனான உரையாடல் வெளியான நிலையில் அதில் ஆளுநரின் பெயரும் அடிபட்டதால்... நேற்று மாலை அதுபற்றி விளக்கம் அளிக்க சென்னை ராஜ்பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். நிகழ்வின் இறுதியில் ஆங்கிலப் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம் ஒரு கேள்வி கேட்கப் போக,பதில் சொல்லாமல் அவரது கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றுள்ளார் ஆளுநர்.

இந்நிகழ்வு பற்றி ஒரு சில நிமிடங்களில், தான் அருவெறுப்பாக உணர்ந்ததாக லட்சுமி சுப்பிரமணியம் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு முதலே ஆளுநரின் நடவடிக்கை குறித்து பல்வேறு பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் அமைப்புகளும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ( சென்னை பிரஸ் கிளப்) இணை செயலாளர் பாரதி தமிழன் இவ்விவகாரம் குறித்து ஆளுநருக்கு ஓர் கடிதத்தை இன்று எழுதியிருக்கிறார்.

அதில்,

“தமிழக ஆட்சி முறைமையின் நிர்வாகத் தலைவராகிய உங்களிடம் இருந்து இப்படிப்பட்ட, தவறான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கடிதத்தை மிகுந்த வலியோடும் அதிர்ச்சியோடும் எழுதுகிறோம்’’ என்று தொடங்கியிருக்கிறார்.

“அந்தப் பத்திரிகையாளர் சந்திப்புக்கான அழைப்பு உங்களால் விடுக்கப்பட்டது. அதில் கலந்துகொள்ள தனது பணி ரீதியாக திருமதி.லட்சுமி சுப்பிரமணியம் வந்திருக்கிறார். ஆனால் அவருடைய கேள்விக்கு பதில் அளிப்பதற்கு மாறாக, அவரது கன்னத்தைத் தட்டும் செய்கை என்பதை, ஒரு சித்திரவதையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தாங்கள் இதை ஓர் மூத்த மனிதரின் கள்ளம் கபடமற்ற செய்கை என்று நியாயப்படுத்தலாம். ஆனால் சட்டம் இதை அப்படிப் பார்க்கவில்லை.

பத்திரிகையாளர்கள், அதுவும் பெண் பத்திரிகையாளர்கள் மிகக் கடினமான சூழல்களை எதிர்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியாற்றும் சூழலில் பல அத்துமீறல்களையும், சொல்லப்படாத தொந்தரவுகளையும் சந்தித்து வருகின்றனர்.

ஆளுநர் என்பவர் அரசியல் சாசன அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். இந்தப் பதவியில் இருப்பவரின் வார்த்தைகளும், செயல்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், உங்களது நேற்றைய செயல்பாடுகள் அவ்வாறு இல்லை என்பதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டுகிறோம்.

ஆளுநரே இப்படி செயல்படுகிறாரே என்று மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் உழைக்கும் பெண் பத்திரிகையாளர்களிடம் நடந்துகொள்ள முற்பட்டால் அது பலத்த அபாயத்துக்கு வழி வகுத்துவிடும். எனவே ஆளுநர் அவர்களே... ஏப்ரல் 17 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தாங்கள் நடந்துகொண்ட விதத்துக்காக உடனடியாக மன்னிப்பு கோருங்கள். இதன் மூலம் இந்த விவகாரம் தீவிரம் அடைவதைத் தவிருங்கள்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன்.

மேலும் இந்திய பெண் நிருபர் சங்கத்தினர், ‘’லட்சுமி சுப்ரமணியத்துக்கு நிகழ்ந்தது என்பது பணியிடங்களில் பெண்கள் மீது நடக்கும் அத்துமீறலாகும். அந்த சட்டப் பிரிவுகளின் படி ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பில், “ பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல நிச்சயம் கண்டிக்கதக்கது. இந்த செயல் அவருக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது’’ என்று கூறியுள்ளனர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon