மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

தினகரன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!

தினகரன் மீதான வழக்கு  விசாரணைக்குத் தடை!

சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி. தினகரன் மீது மத்திய அமலாக்கத் துறையினர் கடந்த 1996ஆம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

அதாவது ஐரோப்பிய யூனியனில் உள்ள ஓட்டலில் 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், ஒரு லட்சம் பிரிட்டன் பவுண்டும் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக ஒரு வழக்கும், பார்க்லே வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பான மற்றொரு வழக்கும் என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் பார்க்லே வங்கியில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையிலேயே, இரண்டாவது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி, "ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரிப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து வரும் ஜூன் 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை, ஐரோப்பிய யூனியன் ஓட்டலில் டாலர்களை முதலீடு செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்குத் தடை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

ஏற்கனவே பார்க்லே வங்கி முதலீடு வழக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon