மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

காலா சிங்கிளாக வருவாரா?

காலா சிங்கிளாக வருவாரா?

காலா திரைப்படம் எப்படியும் ரிலீஸாகிவிடும் என்று ரஜினி ரசிகர்கள் நேற்றிலிருந்து மகிழ்ச்சியில் இருக்கின்றனர். திரையுலக ஸ்டிரைக்கை தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் ஆகிய மூவரும் அமர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றிபெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்த உடனே விஷாலிடம் கேட்கப்பட்ட கேள்வி ‘காலா படம் எப்போது ரிலீஸாகும்’ என்பது தான். இதற்கு பதிலளித்த விஷால் “அதை தயாரிப்பாளர்கள் அனைவரும் அமர்ந்து பேசித்தான் முடிவெடுக்கவேண்டும். நிறைய படங்கள் ரிலீஸ் தள்ளிப்போய் நிற்கின்றன. அவற்றை வரிசைப்படுத்தி ரிலீஸ் செய்வது குறித்து முடிவெடுக்கவேண்டும். ஒரு வாரத்துக்கு மூன்று படங்கள் வீதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

காலா திரைப்படம் ரிலீஸாகும் சமயத்தில் அதனுடன் போட்டியிட எந்தத் திரைப்படமும் தயாராக இருக்காது என்பது கள நிலவரம். அதேசமயம் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு 9 நாட்கள் மட்டுமே இருப்பதால், இதுவரையிலும் பாடல்களைக் கூட ரிலீஸ் செய்யாத காலா படத்துக்கு உலகம் முழுவதும் புரமோஷன் செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. காலா திரைப்படத்துக்கு இதுவரையிலும் சென்சார் சான்றிதழும் வாங்கப்படவில்லை. ஸ்டிரைக் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காலா திரைப்படத்திற்காக சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தடையில்லா சான்றிதழ் கேட்டபோது, வரிசைப்படி காலா திரைப்படத்தின் முறை வரும்போது தரமுடியும் என்று கூறியிருந்தார்கள். எனவே, இனி தடையில்லா சான்றிதழ் பெற்று, சென்சாருக்கு படத்தைத் திரையிட்டு 9 நாட்களுக்குள் படத்தை ரிலீஸ் செய்வதென்பது நடக்கக்கூடிய காரியமா என வியக்கிறது திரையுலகம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் மட்டுமே இது சாத்தியம் என்று அனுபவம் பெற்ற தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். எனவே, ஸ்டிரைக்கின் போது தடையில்லா சான்றிதழ் வழங்காததை மனதில் வைத்துக்கொள்ளாமல் காலா தயாரிப்பு தரப்பும், ஸ்டிரைக்கினால் தியேட்டரை மறந்துபோன தமிழக சினிமா ரசிகர்களை மீண்டும் தியேட்டர் நோக்கி இழுக்க தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பும் ஒன்று சேர்ந்து இயங்கினால் ‘வேங்கையன் மகன் சிங்கிளாக வருவார்’.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon