மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 4 டிச 2020

காவிரி: இளம் இயக்குநரின் புதிய முயற்சி!

காவிரி: இளம் இயக்குநரின் புதிய முயற்சி!

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, காவிரி விழிப்புணர்வுப் பாடலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் ராகேஷ்.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் தீவிரமடைந்துவருகின்றன. காவிரி பிரச்சினைக்காக விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகத்தினர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்திவருகின்றனர்.

அந்த வகையில், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு பற்றிய பாடல் ஒன்றை தயாரித்து இயக்கிவருகிறார்.

சுமார் 5 நிமிடம் கொண்ட இந்தப் பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘கோலிசோடா-2’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு தஞ்சை, திருச்சி காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் படமாக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து இயக்குநர் ராகேஷ் பத்திரிகையாளரிடம் பேசும்போது, “நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்துவந்தது. அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள், வலிகள், உணர்வுகள் மத்திய அரசை எட்டவேண்டும் எனும் விதமாக என்னுடைய தனிப்பட்ட முயற்சியாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளேன். விரைவில் இந்தப் பாடல் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon