மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

மகாபாரதத்தில் இன்டர்நெட் : திரிபுரா முதல்வர்!

மகாபாரதத்தில் இன்டர்நெட் : திரிபுரா முதல்வர்!

செயற்கைக்கோள்கள் மற்றும் இணைய வசதிகள் மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இருந்தன என்று கூறியுள்ளார் திரிபுரா மாநில முதலமைச்சரான பிப்லாப் குமார் தேப்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள பிரக்ஞா பவனில், நேற்று (ஏப்ரல் 17) கம்யூட்டர்மயமாக்கம் மற்றும் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், கம்யூட்டர் தொழில்நுட்பம் தமக்குச் சொந்தமானது என ஐரோப்பாவும் அமெரிக்காவும் உரிமை கோருகின்றன என்றும், ஆனால் அது இந்தியாவுக்குச் சொந்தமானது என்றும் கூறினார்.

“இணையம் மற்றும் செயற்கைக்கோள் வசதிகள், மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இருந்தன. குருசேத்திர போரில் நடந்தவை குறித்து, பார்வைத்திறனற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டி சஞ்சயன் எவ்வாறு தெரிவித்தார்? அப்போது, அங்கு இணைய வசதி இருந்தது என்றுதானே அர்த்தம். இணையமும் செயற்கைக்கோளும் அந்த நேரத்தில் அங்கு இருந்தன” என்று அந்தக் கருத்தரங்கில் பேசினார் பிப்லாப்.

மேலும், தற்போதும் கம்யூட்டர் தொழில்நுட்பத்தில் இந்தியாவே முன்னணியில் இருப்பதாகக் கூறினார். “இணையமும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உண்டு. இந்தக் கலாசாரம் இந்தியாவுக்குச் சொந்தமானது; இதற்காக, நான் பெருமைப்படுகிறேன். இன்றைக்கும் மென் துறையில் இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் பணியாற்றுகின்றனர். மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பே அதிகம்” என்றார்.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கம்யூட்டர்மயமாக்கத்தின் நன்மைகள் கிடைக்க வேண்டுமென்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாகவும் முதல்வர் கூறினார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் மோடி, பாஜக எம்பிக்களும் மாநில முதலமைச்சர்களும் அதனைப் பின்பற்ற வேண்டுமென்று கூறியுள்ளதாகவும் பிப்லாப் தெரிவித்தார்.

மாநில முதலமைச்சரின் பேச்சில் இதிகாசம் குறித்த கருத்துகள் கடும் பரிகாசத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon