மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

வன்கொடுமை சட்டம்:பாஜக மாநில அரசுகள் மறுசீராய்வு மனு!

வன்கொடுமை சட்டம்:பாஜக மாநில அரசுகள் மறுசீராய்வு மனு!

வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன.

வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் சில அப்பாவிகள் பாதிக்கப்படுவதாக கூறிக் கடந்த (மார்ச் 20) தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக கைது செய்யக்கூடாது. விசாரணையில் அதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்தது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வட மாநிலத்தில் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 11 பேர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவு, இச்சட்டத்தை நீர்த்துப் போக செய்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. உடனடி தீர்வுகாண அவசரச்சட்டம் கொண்டுவருவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதே விவகாரம் தொடர்பாக கேரள அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தொடர்பான உத்தரவுகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தற்போது பாஜக ஆளும் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளன. விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் நேற்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என நேற்று(ஏப்ரல் 17) அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon