மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

வாய்க்கால் கரையில் ஆதார் கார்டுகள்!

வாய்க்கால் கரையில் ஆதார் கார்டுகள்!

திருப்பூரில் வாய்க்கால் கரையில் 500க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள், வங்கிகளின் உத்தரவு தபால்கள் கொட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே உள்ள பொங்கலூர் அலகுமலை சாலையில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இதன் கரையில் ஒரு சாக்கு மூட்டை வீசப்பட்டுள்ளது. அந்த மூட்டையிலிருந்து ஆதார் கார்டுகள், வங்கிகளின் உத்தரவு தபால்கள், தொலைபேசி பில்கள், எல்ஐசி கடிதம், இன்டர்வியூ கார்டுகள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்த அழைப்பாணை மற்றும் கடிதங்கள் உள்ளிட்டவை சிதறிக் கிடந்துள்ளன. அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதைப் பார்த்து அதிர்ச்சிடைந்துள்ளனர். உடனடியாக திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தாசில்தார் கோபால கிருஷ்ணன் பிஏபி வாய்க்கால் கரைக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அங்கிருந்த ஆதார் கார்டுகள், வங்கிகளின் உத்தரவு தபால்கள், தொலைபேசி பில்கள், கடிதங்கள் ஆகியவற்றில் பெரும்பாலானவை சாமுண்டிபுரம், திருபூலுவபட்டி, வாஞ்சி நகர் முகவரியில் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடத்த உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அம்சவேணி நியமிக்கப்பட்டார். தபால் ஊழியர்தான் இதனைக் கொட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து தபால் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் கோபிநாதன், “பிஏபி வாய்க்கால் கரையில் ஆதார் கார்டுகள், வங்கிகளின் உத்தரவு தபால்கள் மற்றும் தபால்களைக் கொட்டிச் சென்ற தபால் ஊழியர் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்தச் செயலில் ஈடுபட்ட தபால் ஊழியர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

2017 நவம்பர் மாதம், கிருஷ்ணகிரி அருகேயுள்ள நேதாஜி சாலையில் 3 மூட்டைகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளை துப்புரவு தொழிலாளர்கள் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஒரிஜினல் ஆதார் கார்டுகள், அட்டைகள், வங்கியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய ஏடிஎம் கார்டின் பின் எண்கள், வங்கிகளின் உத்தரவு தபால்கள், கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து அனுப்பப்படும் அழைப்பாணை மற்றும் கடிதங்கள், நகை ஏல அறிவிப்பு தபால்கள், எல்ஐசி கடிதங்கள் என முக்கியமான கடிதங்களும் ஆவணங்களும் இருந்தன. அதேபோல், 2016 மார்ச் மாதம் திருப்பூர் கல்லாங்காடு, பாறைக்குழி குப்பையில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ஆதார் கார்டுகள், அட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஆதார் கார்டுகள், அட்டைகளைக் குப்பையில் வீசிய தண்டபாணி என்னும் தற்காலிக தபால்காரர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon