மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

துணைவேந்தர் அதிகாரத்தில் ஆளுநர் தலையீடு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று (ஏப்ரல் 17) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கல்லூரி மாணவிகளை மிகவும் மோசமான - அநாகரிகப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார் என்று மாநிலத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்ற நிர்மலா தேவியின் தொலைபேசி உரையாடல், கல்லூரிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர் அனைவரையும் குலை நடுங்க வைத்திருக்கிறது.

தமிழகத்தைப் பேரதிர்ச்சியால் உலுக்கிக்கொண்டிருக்கின்ற இந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து முதல்வர் பழனிசாமி எப்போதும் போல் வாய்மூடிக் கொண்டிருப்பது, தமிழக அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

மாநில ஆளுநர், துணைவேந்தரின் அதிகாரத்தையும், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டு பேட்டியளிப்பது ஆரோக்கியமான நடைமுறையாகாது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ள நேரத்தில், ஆளுநர் துணைவேந்தரின் அதிகாரத்திற்குள் வலிந்து பிரவேசித்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்திருப்பது, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை எல்லோருடைய மனதிலும் ஏற்படுத்துகிறது.

ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ள மதுரை பல்கலைக்கழகச் சட்ட விதி, துணைவேந்தரின் அதிகாரங்கள் தொடர்புடையது. அந்த அதிகாரத்தை வேந்தர் எப்படி தன் கையில் எடுத்துக்கொண்டு விசாரணை அதிகாரியை நியமிக்கலாம்? தொலைபேசி உரையாடலில் உள்ள விவரங்களைக் கேட்டுவிட்டு, யாரும் கேட்காமலேயே ஒரு விளக்கம் கொடுக்கப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முன்வந்திருக்கும் ஆளுநர், அவரே எப்படி அந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க ஒரு அதிகாரியை நியமிக்கலாம்?

அரசியல் சட்டம் பற்றி விளக்கும் ஆளுநர் ‘தனக்குத் தானே ஒருவர் நீதிபதியாக இருக்க முடியும்’ என்று நம்புவது எப்படி இயற்கை நீதியாக இருக்க முடியும்? அதைவிட, பல்கலைக்கழக நிர்வாகங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்ற ஆளுநரின் புதிய விளக்கம் மாநில அரசு இருப்பதாகவே அவர் உணரவில்லை அல்லது மாநில அரசை அவர் அங்கீகாரம் செய்யவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

பேராசிரியையின் சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட தொலைபேசி உரையாடல் விவகாரத்தில் ஆளுநரே விசாரணை அதிகாரியை நியமித்த பிறகும், மாநில அரசு தலையிட முடியாது என்று அறிவித்த பிறகும் இன்னும் அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டவரைப்போல, முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி இருப்பது தமிழ்நாட்டிற்கு நீங்காத பெருத்த அவமானம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர், முக்கியமான பிரச்சினைகளில்கூடக் கருத்து அறிவிக்காமல் மயான அமைதி காப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அசிங்கம். ‘அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுவேன்’ என்று உறுதியளித்துப் பதவியேற்ற ஆளுநர் இப்படிப் பத்திரிகையாளர் சந்திப்பை ராஜ்பவனில் நடத்தி, மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியிருப்பது மாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சி, ஆளுநர் மாளிகையின் பார்வையில் நடைப்பிணமாக வைக்கப்பட்டுள்ளதாகவே உணரப்படுகிறது என்று எண்ணுகிறேன்.

ஆகவே மாநில ஆளுநரின் இந்த அதிகாரத் தலையீட்டையும் ஆக்கிரமிப்பையும் குறித்து உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியக் குடியரசுத் தலைவருக்கு புகார் அளிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சுவீகரிக்கும் ஆளுநர் மாளிகையின் அரசியல் சட்ட விரோதப் போக்கிற்குத் தைரியமாகக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon