மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

மணல் கொள்ளை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

மணல் கொள்ளை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நொய்யலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மணலைக் கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனங்களையும், மணலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள நொய்யலாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகிறது. கோயமுத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. கோவை மற்றும் திருப்பூர் நகரைக் கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் மற்றும் சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. அதனால் இந்த ஆறு மிகவும் மாசடைந்து காணப்படுகிறதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கிறார்கள்.

காவிரி ஆற்றில் மணல் எடுப்பதற்கு நீதிமன்றம் தடைவிதித்த காரணத்தால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் ஆங்காங்கே மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லாரிகளிலும், மாட்டு வண்டிகளிலும், இருசக்கர வாகனங்கள் வழியாகத் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது.

நொய்யலாற்றில் இரவு நேரத்தில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் துணை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, லாரி மற்றும் மாட்டு வண்டி மூலம் நேற்றிரவு(ஏப்ரல் 17) மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கடத்திய மணலையும், வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்திருப்பதாவது, ''இயற்கை வளங்களைச் சூறையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இயற்கையைப் பாதுகாப்பதில், எல்லோருக்கும் பங்கு உள்ளது. நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில், அரசு தனி கவனம் செலுத்துகிறது. அதன் ஒரு பகுதியாகவே, மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற சட்ட விரோதச் செயல்கள் குறித்து 94458-46282 என்ற எண்ணுக்கு அழைத்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon