மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

யாராக இருந்தாலும் நடவடிக்கை!

யாராக இருந்தாலும்  நடவடிக்கை!

பேராசிரியை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் எப்பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் உரையாடல் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேராசிரியை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதில் ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அடுத்து, நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், தனக்கு நிர்மலா யார் என்றே தெரியாது என்று பதிலளித்தார். சந்திப்பின் முடிவில் ஆளுநர், பெண் பத்திரிகையாளர் கன்னத்தில் தட்டிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னை அடையாரில் இன்று (ஏப்ரல் 18) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "பேராசிரியை விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. திமுக, அதிமுக என எந்த ஆட்சிக்காலத்திலும் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க தமிழக காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க முடியாது. ஆளுநர் மாளிகைதான் பதிலளிக்க வேண்டும். எனவே இதுகுறித்து கருத்து கூற முடியாது என்று கூறினார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon