மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

ஆளுநர் பேட்டி முழு விவரம்!

ஆளுநர் பேட்டி முழு விவரம்!

கல்லூரிப் பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அளித்த பேட்டியில் சிலவற்றை நேற்றைய மாலை 7 மணிப் பதிப்பில் பதிவு செய்திருந்தோம். முழுப் பேட்டி இதோ:

“அனைவரையும் ராஜ்பவனுக்கு வரவேற்கிறேன். தமிழக ஆளுநராக நான் பதவியேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ளதால் உங்களையெல்லாம் சந்திக்கலாம் என்று அழைத்துள்ளேன். நானும் செய்தியாளர்தான்” என்று தனது பேச்சைத் தொடங்கிய ஆளுநர், “பல்கலைக்கழகப் பேராசிரியை குறித்த செய்திகளைச் செய்தித்தாளில் பார்த்தேன். அது மிக முக்கியமான பிரச்சினை. இதற்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சந்தானம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் விசாரணையில் பெண்களை விசாரணை அதிகாரிகள் உதவிக்கு வைத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்துக்குள் அவர் அறிக்கையைச் சமர்ப்பிப்பார். அதன் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் . பல்கலைக்கழகம் என்னோடு கலந்து ஆலோசிக்காமல் விசாரணை கமிட்டி அமைத்துள்ளது.

வேந்தருக்கு மட்டுமே குழு அமைக்கும் உரிமை உள்ளது. துணைவேந்தர் அலுவலகத்தில் சில தவறுகள் நடந்துள்ளன. எனது அனுமதி இல்லாமல் அவர்கள் குழு அமைத்துள்ளனர். தனது தவறுகளை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

“உங்களின் பெயரை பேராசிரியை நிர்மலா தேவி குறிப்பிட்டுள்ளாரே?” என்ற கேள்விக்கு, “நீங்கள் ஆடியோவை முழுமையாகக் கேட்டீர்களா?” என நிருபரிடம் எதிர்க்கேள்வி எழுப்பிய ஆளுநர், “நான் பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டுள்ளேன். செனட் உறுப்பினர்கள் என்னைச் சுற்றியிருப்பார்கள். நீங்கள் குறிப்பிடும் நபரின் முகத்தைக்கூட இதுவரை நான் பார்த்ததில்லை. என்னைச் சுற்றி எனது டீம் இருக்கும். அவர்களை மீறி ஒரு பறவைகூட என்னை நெருங்க முடியாது.

ஆடியோவில், தனது தாத்தாவைப் போன்ற நபர் என்றே பேராசிரியை கூறியுள்ளார்” என்று விளக்கமளித்தார்.

“இந்த வழக்கை சிபிஐக்கு ஏன் மாற்றக் கூடாது?” என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும். சிபிஐ விசாரணை தற்போது தேவையில்லை. தேவைப்பட்டால் முதல் ஆளாக நானே உத்தரவிடுவேன்.

78 வயதைக் கடந்துள்ளேன். பேரன் மட்டுமல்ல, கொள்ளுப் பேரனும் எனக்குண்டு. எனவே, என் மீது குற்றம்சாட்டாதீர்கள்” என்று வலியுறுத்தினார்.

மாநில அரசைக் கேட்காமலேயே ஆளுநர் குழுவை அமைத்துள்ளார் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு,

தனது கையில் இருந்த ஆளுநர் வழிகாட்டிப் புத்தகத்தில் இருந்து, “துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் அமைச்சர்களை ஆளுநர் ஆலோசிக்க அவசியமில்லை” என்ற வரியைக் குறிப்பிட்ட அவர், “பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர்” என்று தெரிவித்தார்.

மேலும், “துணைவேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் நடைபெற்றது. நியமனங்களில் முழு வெளிப்படைத் தன்மை உள்ளது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் மீதான பாலியல் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. நான் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. அரசின் செயல்பாடு திருப்திகரமாகவே உள்ளது.

காவிரி விவகாரம் என்னுடைய இதயத்தில் இருக்கிறது. நான் எப்போதெல்லாம் டெல்லி சென்றேனோ, அப்போதெல்லாம் காவிரி விவகாரம் தொடர்பாக பேசி உள்ளேன். ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்துப் பேசினேன். தமிழகத்துக்குக் காவிரி நீர் தேவை என்பது எனக்குத் தெரியும். நானும் ஒரு விவசாயிதான். காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் இன்றுகூட தொலைப்பேசியில் பேசினேன். மேலாண்மை வாரியத்துக்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்குச் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon