மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 6 ஜூலை 2020

ஸ்வீடன் - இந்தியா இடையே ஒப்பந்தம்!

ஸ்வீடன் - இந்தியா இடையே ஒப்பந்தம்!

ஸ்வீடன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு முதன்முறையாக நடைபெற்ற இந்தோ – நார்டிக் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு ஐந்து நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) புறப்பட்டுச் சென்றார். 30 ஆண்டுகளுக்குப் பின், ஸ்வீடன் நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோடி. ஸ்டாக்ஹோம் நகரில் மோடியை ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோவென் சந்தித்தார். அதன்பின், ஸ்வீடன் அரசர் கார்ல் 16ஆம் கஸ்டபைச் சந்தித்துப் பேசினார் மோடி.

ஸ்டாக்ஹோம் நகரைச் சுற்றிப் பார்த்தவாறே மோடியும் ஸ்டீபன் லோவென்னும் உரையாடினர். இதனைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகின. அதன்பின், இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வளர்ச்சியிலும் வளத்திலும் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகப் பாராட்டு தெரிவித்தார் லோவென். மேலும், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் ஸ்வீடன் முக்கியப் பங்களிப்பை அளிக்கவுள்ளதாகக் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் ஸ்வீடன் ஒத்துழைப்பைத் தருவதாக உறுதியளித்ததாகவும், இணையப் பாதுகாப்பிலும் ஒன்றுபட்டுச் செயல்படவுள்ளதாகவும் தெரிவித்தார் நரேந்திர மோடி.

தொடர்ந்து, ஸ்வீடன் நிறுவனங்களின் தலைமைச்செயல் அதிகாரிகளுடனான கூட்டத்தில் மோடியும் லோவென்னும் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, முதன்முறையாக நடைபெற்ற இந்தோ – நார்டிக் மாநாட்டில் கலந்துகொண்டார் மோடி. இதற்கு முன்னதாக, ஸ்டாக்ஹோம் நகரில் பின்லாந்து, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களைச் சந்தித்து தனித்தனியாகப் பேசினார்.

தொடர்ந்து பிரிட்டன் செல்லவிருக்கும் மோடி, லண்டனில் நடைபெறவுள்ள காமன்வெல்த் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon