மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

ஆளுநர் செயலால் மீண்டும் சர்ச்சை!

ஆளுநர் செயலால் மீண்டும் சர்ச்சை!வெற்றிநடை போடும் தமிழகம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிலையில், சந்திப்பின் முடிவில் கேள்வி எழுப்பிய பெண் நிருபர் ஒருவரை ஆளுநர் கன்னத்தில் தட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைப்பது தொடர்பான செல்போன் உரையாடல் அண்மையில் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட பேராசிரியைக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்க நேற்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜ்பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். சந்திப்பின் முடிவில் ‘தி வீக்’ இதழின் சிறப்புச் செய்தியாளர் லஷ்மி சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்காமல் அவரது கன்னத்தில் தட்டியுள்ளார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

இதுகுறித்து லஷ்மி சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் முகத்தை நான் பலமுறை கழுவிவிட்டேன். ஆனால், இன்னும் என்னால் அந்தச் சம்பவத்திலிருந்து விடுபட முடியவில்லை. தன்னுடைய செயலால் ஆளுநர் என்னைக் கோபப்படுத்திவிட்டார், கொந்தளிக்கச் செய்துவிட்டார். தாத்தாவின் மனநிலையிலிருந்து ஆளுநர் தட்டிக்கொடுத்தார் என்று எடுத்துக்கொண்டாலும், என்னைப் பொறுத்தவரை அது தவறு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆளுநர் கன்னத்தைத் தட்டும் புகைப்படத்தையும் தனது பக்கத்தில் வெளியிட்டு, ‘ஆளுநருடனான பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் கேள்வி ஒன்றை எழுப்பினேன். அதற்குப் பதிலாக ஒரு பெரும்போக்கோடு, என் அனுமதியில்லாமல் என்னுடைய கன்னத்தைத் தட்டினார்’ என்று குறிப்பிட்டுள்ளார் லஷ்மி சுப்பிரமணியன்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ‘நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். பெண் பத்திரிகையாளரின் அனுமதி இல்லாமல், அவரைத் தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு ஊடகவியலாளர்களும் மற்றவர்களும் ஆளுநரின் இச்செயலைக் கண்டித்துக் கருத்துகள் தெரிவித்துவருகிறார்கள்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon