மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 23 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: காவிரி வாரியம் வருமா, வராதா?

சிறப்புக் கட்டுரை: காவிரி வாரியம் வருமா, வராதா?வெற்றிநடை போடும் தமிழகம்

பா.சிவராமன்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கொள்கைப் பின்னணியும் சட்ட நுணுக்கங்களும்

‘மோடியே திரும்பிப் போ’ எனப் பிரதமருக்கு வேறு எங்கும் கிடைக்காத அளவில் தமிழகத்தில் கிடைத்த ‘கறுப்பு’ வரவேற்பு, தோழமைக் கட்சிகளுடன் நடைப்பயணம் செய்யும் திமுகவின் எதிர்ப்பு, தினகரனின் ஊர் ஊராகச் செல்லும் ஆர்ப்பாட்டம், ரஜினிகாந்தின் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், இந்த அனைத்துவகை எதிர்ப்பையும் எதிர்கொள்ள நடுவண் அரசைப் ‘பகைக்காமலே எதிர்க்கும்’ எடப்பாடி அரசாங்கத்தின் நாடகம் இவையனைத்தும் ஊடகத் தலைப்புச் செய்திகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இவற்றின் பின்னணியில் எழும் முக்கியக் கேள்வி, மே 3ஆம் தேதி பிரச்சினை ஒரு முடிவுக்கு வருமா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த மே 3 கெடு, ஓர் இடைக்காலக் கெடு மட்டுமே. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மிஸ்ரா கூறியதாவது: ‘(மே 3ஆம் தேதி) நதிநீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை (draft scheme for water-sharing) நீதிமன்றத்தின் முன்பதிவு செய்யுங்கள். அதன்மீது நீங்கள் அனைவரும் (அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுவை) உங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள். இந்த ஸ்கீம் எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போது முதல் அது அனைவரையும் கட்டுப்படுத்தும்.’

இதுகுறித்து மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரவி கிரண் ஜெயின் (பாஜகவின் சட்ட ஆலோசகர்களுக்கு இவர் நெருக்கமானவர். இவரது புத்தகம் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியால் அண்மையில் வெளியிடப்பட்டது), ரவீந்திர கடியா (ரவீந்திர கடியா முன்னாள் அரசில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய இந்திரா ஜெய்சிங் அவர்களுடன் இணைந்து வழக்கறிஞர்கள் குழுமம் (Lawyers Collective) என்ற அவரது அமைப்பில் பணியாற்றும் முக்கிய வழக்கறிஞர்) மற்றும் இன்னும் சில சட்ட வல்லுநர்களை மின்னம்பலம் சார்பாக அணுகினோம். அவர்கள் கருத்துகளின் சாரத்தை இங்கே தருகிறோம்:

• மே 3ஆம் தேதிக்குள் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசின் பிரதிநிதி அரசு தலைமை வழக்கறிஞர் (Attorney General) கே.கே.வேணுகோபால் அவர்களிடம் தலைமை நீதிபதி மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் குறிப்பிட்டது ஒரு நகல் (Draft Scheme) ஸ்கீம் மட்டுமே. அதை இறுதி செய்ய எத்தனை காலம் ஆகும் என கணிப்பது கடினம். அதுகுறித்து கருத்து தெரிவிக்க மற்ற மாநிலங்கள் இழுத்தடிக்கலாம். அக்கருத்துகள் பற்றி தமது ஏதிர்வினையைத் தெரிவிக்க மத்திய அரசு கால அவகாசம் கோரலாம்.

• மேலும் நுணுக்கமாகப் பார்த்தால், நதிநீர் பங்கீட்டு ஸ்கீம் (water-sharing scheme) மேலாண்மை வாரியத்தை உள்ளடக்கியது. இது குறித்து மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீடு தகராறு சட்டம் 1956இன் பிரிவு 6Aஇன்படி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனக் காவிரி நடுவர் மன்றம் இறுதி செய்த உத்தரவுக்கு மத்திய அரசின் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டேயாக வேண்டும் என்பதல்ல; சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தக்கநேரத்தில் அமைக்கப்படலாம் என்று தெரிவித்த ஆட்சேபத்தை தமது பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பில் நீதியரசர்கள் நிராகரித்துவிட்டனர். காவிரிப் பிரச்சினையில் 16 பிப்ரவரி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பக்கம் 452இலிருந்து 457 வரை பார்க்கவும்).

• மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற நடுவர் மன்றத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் ஆணையாகக் கருதப்பட வேண்டும் என 16 பிப்ரவரி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எந்த மாநிலத்துக்கு எத்தனை டிஎம்சிக்கள் (TMCs), எந்தெந்த மாதம் எவ்வளவு நீர் விடப்பட வேண்டும் என விவரமாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்திவிட்டது. மேலும் காவிரி தீர்ப்பை அமல் செய்ய மட்டுமே (exclusively for implementation) இந்த மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. உண்மைதான்.

• ஆனாலும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வரைவு ஸ்கீம் நதிநீர் பங்கீடு மேலாண்மை வாரியத்தை உள்ளடக்கியது என்றாலும் அத்தகைய மேலாண்மை வாரியத்துக்கான திட்ட முன்வரைவு (blueprint for water management authority) என இதை அர்த்தப்படுத்த முடியாது. இந்த வரைவு ஸ்கீம் மேலாண்மை வாரியத்தைவிடப் பரந்தது. மே 3 அன்று மத்திய அரசு எத்தகைய வரைபடத்தை முன்வைக்கிறது மற்றும் அதுகுறித்து பெஞ்ச் என்ன கருத்து தெரிவிக்கிறது என்பதைப் பார்த்த பின்னரே இது தெளிவாகும். விஷயங்கள் புறப்பட்ட இடத்துக்கே போய்ச் சேர்ந்திருக்க (back to square one) வாய்ப்பில்லை எனினும் புதுப் பிரச்சினைகள் எழுப்பப்படலாம். இன்னும் கால தாமதம் ஆகக்கூடும் எனத் தோன்றுகிறது.

• ‘எக்காரணம் கொண்டும் மார்ச் 29 காலக்கெடு நீட்டிக்கப்படாது’ (பக்கம் 457) என 16 பிப்ரவரி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருந்தாலும், அது வேறு வழியின்றி 3 மே வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியத்துக்கான வரைபடம் வரலாம். ஆனால், அது இறுதி செய்யப்படுவதற்கான கெடு எதுவும் இருக்குமா எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். தமிழர்களின் எழுச்சி கால தாமதத்தை மறைமுகமாகக் குறைக்கக்கூடும்.

காவிரிப் படுகை மாநிலங்களில் ஆயக்கட்டுகள் எவ்வளவு, நீர்த்தேவை எவ்வளவு, நீராதாரங்கள் எவ்வளவு, நிலத்தடி நீரைக் கணக்கில் சேர்ப்பதா இல்லையா, பெங்களூரு குடிநீர்த் தேவை எவ்வளவு, பருவமழை குறையும் ஆண்டுகளில் நீரை எவ்விதம் பகிர்ந்துகொள்வது, பேசித் தீர்த்துக் கொள்வதா இல்லை நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டுமா, நடுவர் மன்றத் தீர்ப்பை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டுமா, இல்லையா என்பன போன்ற பிரச்சினைகளால் நாற்பது ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பின்னரும் விவகாரம் உச்ச நீதிமன்றம் முன் சென்றது. உச்ச நீதிமன்றமே மறு பங்கீட்டு பார்முலாவை அறிவித்த பின் நிலுவையிலுள்ள ஒரே விஷயம் இந்த பார்முலா அமலாக்கப்படுவதற்கான நிறுவன அமைப்பு ரீதியான உத்தரவாதமாக (institutional guarantee) சுதந்திர மேலாண்மை வாரியமொன்றை (independent river authority/IRA) அமைப்பதுதான்.

இந்த மேலாண்மை வாரியம் குறித்த கொள்கை மற்றும் சட்டப் பின்னணியை இங்கே பார்க்கலாம்.

இப்போதைய கொள்கை வகுக்கும் அதிகார மையமான நிதி ஆயோகின் (Niti Aayog) முந்தைய அவதாரமான திட்டக் கமிஷன் (Planning Commission) 12ஆம் ஐந்தாண்டு திட்டத்துக்கான நீர் நிர்வாகத்துக்கான பணிக்குழு ஒன்றை அமைத்திருந்தது. இதன்கீழ் தேசிய நீர் விவகார சட்ட வரைவைத் தயாரிப்பதற்காக சமீபத்தில் மறைந்த பிரபல நீரியல் நிபுணரான ராமஸ்வாமி ஆர் ஐயர் தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிலிப் கல்லெட், கே.ஜே.ஜாய், கே.சி. சிவராமகிருஷ்ணன், விதேஹ் உபாத்தியாயா மற்றும் எம்.எஸ்.வாணி ஆகியோர் இதன் இதர உறுப்பினர்கள். நவம்பர் 2011லேயே இந்தத் துணைக்குழு ஒரு சட்ட முன்வடிவைத் தயாரித்து ஒப்படைத்தது.

தேசிய நீர் விவகாரச் சட்டம் ஒன்று ஏன் தேவை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தச் சட்ட முன்வடிவின் முன்னுரை கூறுவது என்ன?

(காவிரி நதிநீர்ப் பங்கீடு நெருக்கடி குறித்த கொள்கை மற்றும் சட்டப் பின்னணியை நாளை மேலும் காண்போம்.)

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon