மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஸ்ரீ ரெட்டி: தனக்குத் தானே தண்டனை!

ஸ்ரீ ரெட்டி: தனக்குத் தானே தண்டனை!

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் நடிகைகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியதோடு சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டார். கடந்த வாரம் அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். இவ்விவகாரம் தொடர்பாக ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்ததையடுத்து, இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு தெலங்கானா தலைமைச் செயலருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியது.

இதையடுத்து பெண்கள் அமைப்பு ஹைதராபாத்தில் கருத்தரங்கு ஒன்றை கடந்த ஏப்ரல் 16 அன்று நடத்தியது. அதில் நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் ஏராளமான துணை நடிகைகள் கலந்துகொண்டனர். அதில் பேசிய ஸ்ரீரெட்டி, “சினிமாவில் அநியாயத்தைக் கண்டால் ஹீரோக்கள் வீரம் காட்டுகிறார்கள். ஆனால், இதுவே சமூகத்தில் அநீதி நடக்கும்போது அவர்களின் வீரம் எங்கே போய்விடுகிறது என்று தெரியவில்லை. இது போன்ற விஷயத்தில் அவர்கள் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். இவரைத் தொடர்ந்து பேசிய துணை நடிகை சந்தியா நாயுடு, “பொதுவாகவே நான் அம்மா அல்லது அத்தை கேரக்டரில்தான் நடித்துவருகிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை அம்மா என்று அழைப்பவர்களும் அத்தை என்று அழைப்பவர்களும் இரவானால் என்னுடன் வா என அழைப்பார்கள். அந்தளவுக்கு தெலுங்கு சினிமா துறை மோசமான நிலையில் இருக்கிறது” என்று கூறி தன் வருத்தத்தைப் பதிவு செய்தார்.

இதனிடையே, நடிகரும் தெலுங்கு பிலிம் சேம்பர் தலைவருமான பவன் கல்யாண் பேட்டி ஒன்றில் ‘ஸ்ரீலீக்ஸ்’ குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், “ஸ்ரீரெட்டிக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் நீதிமன்றத்தை நாட வேண்டும்; ஊடகங்களால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பவன் கல்யாணின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ரீரெட்டி, பத்திரிகையாளர் சந்திப்பில், “அவர் எப்படி அப்படிக் கூறலாம்? அவரை அண்ணா என்று அழைக்கவே வெட்கப்படுகிறேன். அவரை அண்ணா என்று கூறியதற்கு என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிக்கொண்டே காலிலிருந்த செருப்பைக் கழற்றி தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்டார். மேலும், “தெலுங்கு திரையுலகில் நடக்கும் மிகப் பெரிய விஷயத்துக்காக நாங்கள் போராடி வருகிறோம். எனது இந்தச் செயலுக்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் என்னைத் தாக்கக் கூடாது. அதே போல ரசிகர்களை பவன் கல்யாண் கட்டுக்குள் வைக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும் பவன் கல்யாண் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீரெட்டியை சரமாரியாகத் திட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பவன் கல்யாணை விமர்சித்ததற்காக அவரது தாயிடம் ஸ்ரீரெட்டி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon