மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

சச்சினின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்!

சச்சினின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்!

“கடவுள் ஒரு நாள் உலகை காணத் தனியே வந்தாராம். கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்” என்ற பாடல் வரிகள் கண்ணதாசனால் ‘சாந்தி நிலையம்’ படத்துக்கு எழுதப்பட்டவை. இதை அப்படியே சச்சினுக்கு எழுதினால் ‘கடவுள் ஒரு நாள் எங்கோ செல்ல காரில் வந்தாராம். வழியில் கண்ட ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டியில் ஐந்து பால் ஆடினாராம்’ என்று எழுதலாம். ஏனென்றால், அதுதான் நடைபெற்றது.

இந்தியச் சாலைகள் கிரிக்கெட்டுக்குப் பெயர்பெற்றவை. சிறு சந்து கிடைத்தால்கூடப் போதும், ஏதாவது பொருளை ஸ்டம்பாக வைத்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிடுவார்கள். அந்த அளவுக்கு கிரிக்கெட்டின் தாக்கத்தை இந்திய மக்களிடம் கொண்டுசென்றவர்களில் முக்கியமானவர் சச்சின். அப்படிப்பட்ட மாஸ்டர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவர் அமைதியாக இருந்துவிடுவார் என்றா நினைக்கிறீர்கள். ஒருமுறை கிரிக்கெட் வீரராக இருந்துவிட்டால், அவர்களது காலம் முடியும்வரை அவர் கிரிக்கெட் வீரர் தான் எனும்போது, தன் வாழ்க்கையையே கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த சச்சின் விளையாடாமல் இருப்பாரா என்கிறார் இந்த வீடியோவைப் பார்த்த, சச்சினுடைய நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி.

மும்பையின் பாந்த்ரா நகர சாலையில் சச்சினும், சில வெளிநாட்டு நண்பர்களும் காரில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரமாகச் சிலர் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்த்திருக்கிறார்கள். சிறிது நேரம் காருக்குள்ளே உட்கார்ந்து பார்த்தவர்கள், பிறகு கீழே இறங்கி வந்தனர். அதுவரையிலும் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காரை சாதாரணமாகக் கடந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், அந்தக் காரிலிருந்து சச்சின் இறங்கி வந்ததும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். சுயநினைவுக்கு வந்த சிலர் சச்சினின் காலில் விழுந்து வணங்க முயன்றபோது தடுத்த சச்சின், அவர்கள் கையிலிருந்த கிரிக்கெட் பேட்டை வாங்கிக்கொண்டு சென்று தயாராகி நின்றார். என்ன நடக்கிறதென்றே புரியாமல் இருந்தவர்களுக்கு, இந்த சாதா பிளேயருக்கு சில பந்துகள் பொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் சச்சினுடன் வந்தவர்கள். அவர்கள் வீசிய பந்துகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்ட சச்சின், விளையாடி முடித்ததும் அந்த இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

சச்சின் ஆரம்ப காலத்தில் இப்படித்தான் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார் என்று அவரது நண்பர் வினோத் காம்ப்ளி தங்களது சிறு வயது அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சச்சின் விளையாடிய வீடியோ 1 வீடியோ 2

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon