மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

சித்தராமையாவைத் தோற்கடிக்க விரும்பும் குமாரசாமி

சித்தராமையாவைத் தோற்கடிக்க விரும்பும் குமாரசாமி

சாமுண்டீஸ்வரி தொகுதியில் 2006ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது சித்தராமையாவை எதிர்த்து குமாரசாமி களம் கண்ட சூழ்நிலை, தற்போது மீண்டும் அங்கு உருவாகியுள்ளது. நடக்கவிருக்கும் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக இருந்துவரும் சித்தராமையாவைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி.

கடந்த 2006ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதாதளம் – பாஜக கூட்டணி கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோது, சாமுண்டீஸ்வரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு சில மாதங்கள் முன்னதாக, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அணி மாறியிருந்தார் சித்தராமையா. மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் குமாரசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கான முயற்சியில் தேவகவுடா ஈடுபட்டிருந்த காரணத்தினால், அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். கட்சி மாறிய சில மாதங்களில், அவர் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலின் முடிவில், 257 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சித்தராமையா. அந்தத் தேர்தல், அவரது அரசியல் எதிர்காலத்தையே மாற்றியது.

அதன்பின், வருணா தொகுதியில் போட்டியிட்டு வென்றார் சித்தராமையா. தற்போது அந்தத் தொகுதியில் அவரது மகன் யதீந்திரா போட்டியிடவுள்ளார். இதனால், அவர் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதோடு, பதாமி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என அவர் எடுத்த முடிவுக்கு, காங்கிரஸ் தலைமை ஒப்புதல் தரவில்லை என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவைத் தோற்கடிக்க வேண்டுமென்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி.

இதனால் சித்தராமையாவும் குமாரசாமியும் ஒருவரையொருவர் எதிர்த்து, தேர்தல் களத்தில் உடனடியாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டகத் உல் முஸ்லிமின் (AIMIM) கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி, மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, “மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு, ஓவைசியின் மதம் சார்ந்த கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ளனர். கர்நாடகாவில் அந்தக் கட்சிக்கு செல்வாக்கும் கிடையாது” என்று கூறியுள்ளார் சித்தராமையா.

அதேபோல, பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட வந்துள்ள சித்தராமையாவை விமர்சித்துள்ளார் குமாரசாமி. “2006 இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் வருணா தொகுதிக்குப் போய்விட்டார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இங்கு வந்துள்ளார். முதலமைச்சராக இருந்தபோதும்கூட, அவர் இந்த தொகுதிக்காக எதையும் செய்ததில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

2006ஆம் ஆண்டு, தனது அரசியல் எதிர்காலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டார் சித்தராமையா. தற்போது, முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவி வகித்த நிலையில், மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியில் ஒக்கலிகா மற்றும் நாயக் சமூகத்தினர் அதிகமாக இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாகக் கருதுகிறது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon