மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: தீராத சோகத்தின் விதைகள்!

சிறப்புக் கட்டுரை: தீராத சோகத்தின் விதைகள்!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு

தனக்கென தோழியோ, காதலியோ இருந்தால் தாய் மீதான அன்பு குறைந்துவிடும் என்று அப்படிப்பட்ட வாய்ப்புகளை வலிந்து தவிர்த்தவர் காசிராஜன். இது அவருடைய தாய்க்கும் தெரியும். அவரைத் திருமணம் செய்யச் சொல்லி தாய் வற்புறுத்தியபோதும் காசி அசைந்து கொடுக்கவில்லை. தாய்க்கும் காசிராஜனுக்குமான பாசப் பிணைப்பு எப்படிப்பட்டது என்பதை விளக்க, இதைவிடப் பெரிய வார்த்தைகள் ஏதும் தேவையில்லை.

தாயின் மரணம் இயற்கையானது என்றாலும், ஒருவித குற்றவுணர்ச்சியில் தவித்தார் காசிராஜன். தாயோடு இங்கேயே இருந்திருந்தால், அவரது மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கத் தொடங்கினார். அது அப்படியே வளர்ந்து பூதாகரமாகிப்போனது. இது தவிர, தனது தந்தை ஏதாவது செய்திருப்பாரோ என்ற சந்தேகமும் காசிராஜனுக்குள் இருந்தது. தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவரது மனதுக்குள் பலவித கற்பனைகள் உண்டாகின. திடீரென இறக்கும் அளவுக்கு தாய்க்கு பெரிய நோய்கள் ஏதுமில்லையே என்று அவர் தவித்தார். தந்தையிடம் கேட்டுத் தெளிவுபெறும் தைரியம் அவருக்கு அப்போதும் வரவில்லை. இதிலிருந்து தப்பிக்கத் தன்னையே அடக்கத் தொடங்கினார்.

மரணத்தை நோக்கிய பயணம்

மரணத்தைத் தேர்ந்தெடுத்த காசிராஜன், அதற்காகத் தற்கொலையை நாடவில்லை; மாறாக, சாப்பிடாமல் பட்டினி கிடந்தார். கனடாவில் நான்கு மாத காலம் மனநலக் காப்பகத்தில் இருந்தபோதும்கூட, அவரது எடை பெரிதாகக் குறையவில்லை. ஆனால், தமிழகம் வந்த மூன்றே மாதத்தில் அவரது எடை 78 கிலோவில் இருந்து 52 கிலோவாகக் குறைந்தது.

மன ரீதியாக மரணத்தை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கினார். உடலில் உயிர் இருக்கிறதே தவிர, மனம் மரணித்துப் பல நாள்களாகி விட்டது என்றே அவரும் தெரிவித்தார். இதன் மூலமாக, அவர் பெத்தாலஜிகல் கிரீப் டிசார்டரினால் பாதிக்கப்பட்டிருப்பது நன்கு தெரிந்தது. மருத்துவமனையில் இருந்தபோதும் அவர் யாரிடமும் பேசவில்லை. பழகவில்லை. மருந்து கொடுக்க முயன்றபோது, பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், குழந்தைகள் பேசுவதுபோல எதையாவது உருவகப்படுத்தி பேசிக்கொண்டே இருந்தார்.

மற்றவர்கள் சிறு வாய்ப்பு கிடைத்தாலும், மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல முயற்சிப்பார்கள். ஆனால், கதவு திறந்தே கிடந்தாலும் தனது அறையை விட்டு வெளியே வரமாட்டார் காசிராஜன். போகச் சொன்னாலும் போகமாட்டார். மனரீதியாக மரணமடைந்துவிட்டேன் என்று சொல்லியவாறே, வலுக்கட்டாயமாக வாழ்பவரிடம் என்ன சொல்ல முடியும்? ஆனால், எங்களது சிகிச்சைகளைத் தொடர்ந்தபோது, மெல்லப் பயன் கிடைத்தது. அவர் மனச்சிதைவு நோயால் முழுமையாகப் பீடிக்கப்பட்டதை உணர்ந்து, அதற்குத் தகுந்தவாறு சிகிச்சைகள் அளித்தோம். பழைய நினைவுகளை தூசிதட்டிப் பேசவைத்தோம். தாயின் மீதான உணர்வுபூர்வமான தருணங்களைத் தவிர, மற்றவற்றை சாதாரணமாகப் பேசும் அளவுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர், தாயைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் மனதில் பயமும் பதற்றமும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அதனை எதிர்கொள்வது எப்படி என்று அவருக்குக் கற்றுத்தந்தோம். மற்றவர்களுடன் பழகும் சூழலை வலிந்து உருவாக்கினோம். வாழ்க்கையை வாழ்வதற்கான அர்த்தத்தை உருவாக்க உழைத்தோம்.

மனதில் உள்ள தழும்புகள்

ஏதாவது சோகமான நிகழ்வுகள் நமக்குள் உண்டானது என்றால், அது நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். உடலிலுள்ள தழும்புகள், எப்போது காயம் ஏற்பட்டது என்ற நினைவுகளை எழுப்பும். ஆனால், மனரீதியான தழும்புகளை அவ்வாறு கண்டுணர முடியாது. மனதைப் புண்படுத்தும் நிகழ்வுகள், மூளையில் சில தழும்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தத் தழும்பின் பின்விளைவுகளாக, மூளையில் பழைய நினைவுகள் ‘ஃப்ளாஷ்பேக்’ ஆக வந்து செல்லும். அதிகப்படியான பயமும் பதற்றமும் குழப்பமும் நமக்குள் இருப்பது, அந்தத் தழும்பு மறையாமல் இருப்பதற்கான அத்தாட்சி.

உடம்பில் இருக்கும் தழும்பு மருந்தினால் ஆறும். ஆனால், மனதில் ஏற்பட்ட தழும்புகளை மருந்துகளினால் குணப்படுத்த இயலாது; பிரத்யேக மனநல சிகிச்சைகளினால் மட்டுமே சரி செய்ய முடியும். ஈஎம்டிஆர் (Eye Movement Desensitisation and Reprocessing) என்ற சிகிச்சை அவற்றுள் ஒன்று. இதன் மூலமாகப் பழைய நினைவுகளை எதிர்கொள்ளலாம்.

ஈஎம்டிஆர் என்பது ஏதேனும் கருவி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்த சிகிச்சையின்போது, சீரான கால இடைவெளியில் உங்களது கண்களை அங்குமிங்கும் அசைக்க வேண்டும். குறைந்தது 30 முறை இவ்வாறு செய்ய வேண்டும். ஒரே இடத்தில் கண்கள் நிலைபெற்றிருந்தால் மட்டுமே, நினைவுகள் மேலெழும். சோகமான நினைவுகள் அல்லது எண்ணங்களில் மனம் அழுந்தும்போது, அதிலிருந்து விடுபட இந்த வழிமுறை கைகொடுக்கும். இதனால் நினைவுகள் கலைந்துபோகும். நாமும் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்.

காசிராஜனைப் பொறுத்தவரையில் அவரது தாயின் மரணம் என்பது திடீரென நிகழ்ந்தது. அதனை எதிர்பார்க்காததால், அவர் கடும் பாதிப்புக்கு உள்ளானார். அதனைக் கடந்து செல்லவும் அவரால் முடியவில்லை. இதனால் மூளையில் ஏற்பட்ட தழும்புகளின் தாக்கத்தினால், காசிராஜன் தனக்குள் சுருங்கிக்கொண்டார்.

கடுமையான சோகம் மனதைத் தாக்கும்போது, எல்லாமே குழப்பமாகவும் சிதைந்தும் தோற்றம் தரும். சூழலைக் கையாள முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்போம். பாதிப்புக்குப் பின் ஏற்படும் மனக் கொந்தளிப்பில் சிக்கித் தவிப்போம். அதனால் நாம் யாருடனும் பழகாமல் சுருங்கும்போது, அது மனச்சிதைவு நோயாக மாறவும் வாய்ப்புண்டு. காசிராஜனும் இந்த நிலையைக் கடந்துவர வேண்டிய சூழல் உருவானது.

சிகிச்சைக்குப் பின், மனநல மருத்துவமனையின் நோயாளியாக மட்டும் இராமல், அங்குள்ள பணியாளர்களைப் போல எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கினார் காசிராஜன். படுக்கையே கதி என்று கிடந்தவர், ஈஎம்டிஆர் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலுமாக மாறிப்போனார். கடற்கரைக்கு வாக்கிங் செல்ல வேண்டும் என்றார். தினசரி அவரை அழைத்துப்போவது சிரமமாக இருந்ததனால், வாரத்துக்கு இரண்டு நாள்கள் செல்லுமாறு ஏற்பாடு செய்தோம். அதுவும் நல்ல மாற்றங்களுக்குக் காரணமானது. இதுவே, உண்மையான உலகத்துக்குள் நுழைய அவர் தயாரானதை வெளிக்காட்டியது.

ஆனாலும், அவ்வப்போது தாய் பற்றிய எண்ணங்கள் காசிராஜனின் மனதில் எழும். அதனைச் சரிசெய்யும் முயற்சிகளை உடனடியாகச் செய்தோம். ”அம்மாவின் மரணத்தை நினைத்தாலே மனம் வலிக்கிறது. அதனை நினைக்க வேண்டாமென்று எண்ணுகிறேன்” என்று கூறியவர், மெதுவாக மனம் மாறினார். கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலையை அடைந்தார். தற்போது தமிழகத்திலேயே ஒரு வேலையைச் செய்துவருகிறார்.

தாயின் மரணத்தினாலேயே இத்தகைய பாதிப்புக்கு ஆளானார் காசிராஜன். பொதுவாக விபத்து, கொலை அல்லது பாலியல் வல்லுறவைப் பார்ப்பதனால் ஒருவரது மனதில் தழும்பு உண்டாகலாம். ’எழுந்து வெளியே போ’ என்று யாரோ ஒருவர் சொல்லுவதுகூடத் தீராத சோகத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, யாரோ ஒருவர் நம் முகத்தில் காறி உமிழ்ந்ததாக வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நம் மனதில் உண்டான உணர்வைவிட, அதை நினைத்து நினைத்து அதிகமாக அவமானத்தில் உழல்வோம். இதுமாதிரி சோகமான நினைவுகளைச் சரிவர கையாளாவிட்டால், பெரிய மனச்சிதைவுக்குக்கூட அது வழிவகுக்கலாம்.

இதற்கென பிரத்யேகமான மருந்து, மாத்திரைகள் கிடையாது. நடப்பது, ஓடுவது, நீந்துவது, மரம் ஏறுவது, இசையைக் கேட்பது என்று எல்லாமே ஒருவகை சிகிச்சைதான். இதை எல்லாம் தெரபியாகப் பின்பற்றும் நிலைக்கு நாம் ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பதுதான் தற்கால வாழ்வின் கொடுமையே.

குழந்தைகள் இயற்கையாகவே விளையாடும் இயல்பு கொண்டவை. அதைக்கூட, ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy) என்று தனித்துத் தரவேண்டிய வாழ்க்கை முறையை நாம் அனைவரும் மேற்கொண்டிருக்கிறோம். உண்மையில், இது மாபெரும் சமூக அவலம்தான்.

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில் பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon