மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

தொழில் துறையில் மும்மடங்கு வீழ்ச்சி!

தொழில் துறையில் மும்மடங்கு வீழ்ச்சி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் தொடரும் சர்ச்சைகளும் போராட்டங்களும் தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கிறது என்று பலரும் தனது கருத்தை பதிவுசெய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று (ஏப்ரல் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தமிழகத்தின் ஆட்சி மாறினால்தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும்’ என்று குறிப்பிட்டுள்ளார் திருநாவுக்கரசர். “கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக (ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்) முதலமைச்சர்களாகப் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் அரசும் அதன் பின்பு முதலமைச்சர் பதவி ஏற்ற எடப்பாடி பழனிசாமியின் அரசும் பல முடிவுகளை உரிய நேரத்தில் எடுக்காத காரணத்தால் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மத்திய வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் அறிக்கையின்படி கடந்த 2016ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரூபாய் 4,793 கோடி முதலீடு செய்யப்பட்டது என்றும், 2017ஆம் ஆண்டில் ரூபாய் 1,574 கோடி முதலீடு செய்யப்பட்டது என்றும் இது 2016ஆம் ஆண்டின் முதலீட்டைக் காட்டிலும் மூன்று மடங்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட பிறகு பல நிறுவனங்கள் முதலீடு செய்யாமல் பின்வாங்குகின்றன என்றும் தமிழகத்துக்கு வந்த வாய்ப்புகள் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற பிற மாநிலங்களுக்குச் சென்றுள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“விமான வசதி, துறைமுக வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, நெடுஞ்சாலை வசதி என்று அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் இருந்தபோதிலும் முதலீடுகள் குறைந்துள்ளது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். “இதற்கு தற்போதைய தமிழக அரசின் தலைமையும் அணுகுமுறையும் சரியில்லாததே காரணம்” என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்.

மேலும், “தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலையின்றி இருக்கின்றனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்களின் போராட்டமும் எதிர்ப்பும் மேலோங்கிக்கொண்டு இருக்கிறது” என்றும், “இதை எதிர்கொள்ளும் செயல்பாட்டுத்திறன் தற்போதைய தமிழக அரசுக்கு இல்லை” என்று கூறியுள்ள திருநாவுக்கரசர், “அதிமுக ஆட்சி நாளுக்கு நாள் முடங்கி கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் மீண்டும் அழைத்துச் செல்வதற்குத் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதுதான் ஒரே தீர்வு” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon