மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்!

பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்!

‘ரஜினியை விமர்சிக்கும் பாரதிராஜா, சீமான் ஆகியோர் அந்நிய சக்திகளின் தூதுவர்களாகச் செயல்படுகிறார்கள்’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 17) சென்னை கிண்டியிலுள்ள அவரின் சிலைக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நடிகர் ரஜினிகாந்த்தைக் கர்நாடகக் காவியின் தூதர் என்று பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் விமர்சனம் செய்துள்ளனர். இதில் பாஜகவை இழுப்பதில் எவ்வித நியாயமுமில்லை. அவர்களுக்குள்ளான தொழிற் பிரச்சினையை காவிரிப் பிரச்சினைக்காக முன்னிறுத்துகின்றனர். பாரதிராஜாவும் சீமானும் இவ்வாறுதான் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். நான் சொல்கிறேன் இவர்களெல்லாம் அந்நிய சக்தி காளியின் தூதுவர்களாக செயல்படுகின்றனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

“நிர்மலா தேவி பிரச்சினையில் ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை ஆளுநர் எது செய்தாலும் தவறு என்றே கூறுகிறார். ஆளுநர் செய்வதெல்லாம் தவறு. ஆனால், ஆளுநரையே சென்று சந்தித்து காவிரி விவகாரத்துக்கு நடவடிக்கை எடுங்கள் என்றும் கூறுவார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், களஞ்சியம் உள்ளிட்டோர் தாக்கப்பட்டனர். மேலும், காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இயக்குநர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காத ரஜினிகாந்த், காவலர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த இயக்குநர் பாரதிராஜா, ‘ரஜினிகாந்த் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவர்’ என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon