மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

ஃபுட் கோர்ட்: சென்னையில் உள்ள கான்செப்ட் உணவகங்கள்!

ஃபுட் கோர்ட்: சென்னையில் உள்ள கான்செப்ட் உணவகங்கள்!

உணவகத்தைப் பொறுத்தவரை நாவுக்கு அறுசுவை நிறைந்த உணவுகள் கிடைத்தால் மட்டும் போதாது. இதமான மனநிலை, சாப்பிடும் சூழல், உணவகத்தின் அமைப்பு, இவை எல்லாம் சேர்ந்து நம் சாப்பிடும் அனுபவத்தை அற்புதமானதாக மாற்றிவிடும். அடஹ்ன் மூலம் ருசியும் கூட கூடுதலாகும். இந்த வகையில், உணவின் சுவையோடு, சூழலையும் அழகாக்கித் தரும் தீம் ரெஸ்டாரன்ட்கள் பல சென்னை நகரில் உள்ளன. வித்தியாசமான கான்செப்டோடு நம்மை அசத்தும் தீம் ரெஸ்டாரன்ட்களின் பற்றிய சிறிய தொகுப்பு இதோ உங்களுக்காக!

கைதி கிச்சன்

தவறு செய்தால் தண்டனையாகச் சிறையில் அடைப்பது வழக்கம். ஆனால், உணவருந்த சிறைக்குச் செல்லவே வடிவமைக்கப்பட்டுள்ளது, கைதி கிச்சன். வேலூர் சிறைக்குள் நுழைவது போன்ற முகப்பு. சுவரில் துப்பாக்கி, கைவிலங்குகள் எனச் சிறையில் உணவுண்ணும் அனுபவத்தைத் தரும். ஆர்டர் எடுப்பவர்கள் சிறை அதிகாரி உடையிலும், உணவு பரிமாறுபவர்கள் கைதிகள் உடையிலும் இருப்பார்கள். மெக்ஸிகன், மங்கோலியன், பர்மீஸ் என விதவிதமான சைவ உணவுகள் சுவையாகக் கிடைக்கின்றன.

விலை: ரூ.1,200 இருவருக்கு (தோராயமாக)

முகவரி: 20/3, பிஷப் வால்லர்ஸ் அவென்யூ, மயிலாப்பூர்.

சூப்பர்ஸ்டார் பீட்சா

இந்த ரெஸ்டாரன்ட்டின் எந்தப் பக்கம் திரும்பினாலும், நடிகர் ரஜினிகாந்தின் வெரைட்டியான கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், பாட்ஷா ஆட்டோவில் தொடங்கி, ரஜினியின் பிரபலமான வசனம் வரையிலும் இங்கு காணலாம். அதே போல் பாடல்களை எடுத்துக் கொண்டால் நெருப்புடா நெருங்குடா… வரை எல்லாப் பாடல்களும் ரஜினி பாடல்களாகவே இருக்கும். இன்னும் கூடுதலாக சொல்லப் போனால் மெனு கார்ட்டில் கூட ரஜினியின் படப் பெயர்களே உணவின் பெயர்களாக இருக்கிறது.

விலை: ரூ.1,000 இருவருக்கு (தோராயமாக)

முகவரி: 20, 5வது அவென்யூ, பெசன்ட் நகர்.

747 விமான உணவகம்

​மேகத்தில் நடப்பது போலவும், வானத்தில் டின்னர் சாப்பிடுவது போலவும் ஓர் ஆச்சர்யத்தைத் தருகிறது இந்த 747 விமான உணவகம். விமானத்தில் நுழையும் போது தருவது போல, உணவகத்தில் நுழையும்போது, போர்டிங் பாஸ் தருவார்கள். தேதி, நேரம், இருக்கை வரை அதில் குறிப்பிட்டிருக்கும். அதைப்பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தால், நிஜ விமானத்துக்குள் நுழைவது போன்ற பிரமாண்டத்தைத் தருகிறது இந்த உணவகம். உணவு பரிமாறுபவர்கள் பைலட் உடையில் இருப்பது கூடுதல் சிறப்பு.

விலை: ரூ.1,000 இருவருக்கு (தோராயமாக)

முகவரி: 11, ரமணியம் ஈஷா, ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம்.

சைக்ளோ கஃபே

காபி, பாஸ்தா, பர்கர், பீட்சா, டெஸ்சர்ட் என எதைச் சுவைத்தாலும், கூடவே சைக்கிள் பற்றியான பேச்சும் நீளும்.ஏனெனில், இந்த உணவகம் முழுவதும் சைக்கிளை நினைவுபடுத்துவதாகவே இருக்கிறது. சைக்கிள் ஹேண்டில் மாதிரியான பார் வரவேற்பு, சக்கரங்களால் ஆன மேசை, எந்தப் பக்கம் திரும்பினாலும் சைக்கிள் படங்கள் என்று உற்சாகத்தில் மூழ்கடித்து விடுகிறது இந்த உணவகம். உணவகத்தோடு சைக்கிள் விற்பனையும் இங்கு நடைபெறுகிறது.

விலை: ரூ.1,200 இருவருக்கு (தோராயமாக)

முகவரி: 47, காந்திமண்டபம் ரோடு, சித்ரா நகர், கோட்டூர்புரம்.

அவதார் ரெஸ்டாரன்ட்

ஹோட்டல் சென்னை லா பேலஸ் வளாகத்துக்குள் அமைந்துள்ளது, அவதார் ரெஸ்டாரன்ட். அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகத்துக்குள் நுழைவது போன்ற உணர்வைத் தருகிறது இந்த உணவகம். அடிக்கடி எரிந்து அணையும் விளக்கு, இருக்கையைச் சுற்றி இருக்கும் மரம், செடி, அவதார் உருவங்கள் என, நிஜ அவதார் செட் போன்ற சூழல் கொண்டது அவதார் ரெஸ்டாரன்ட். இங்குச் சுவைக்க அமெரிக்கன் ஸ்டைல் உணவுகளுடன், புதுமையான சூழலும் உங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைப் பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

விலை: ரூ.1,300 இருவருக்கு (தோராயமாக)

முகவரி: 5-9, ஆர்க்காடு ரோடு, காரம்பாக்கம், போரூர்.

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon