மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிறப்புக் கட்டுரை: உண்மையாகவே இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறதா?

சிறப்புக் கட்டுரை: உண்மையாகவே இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறதா?

துருவ் ரவானி

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதி ஆயோக்கின் தலைவரான அமிதாப் காந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 8 சதவிகித வேகத்தில் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மனிதவளக் குறியீடுகளின் அடிப்படையிலும் இந்தியப் பொருளாதாரத்தை மதிப்பிட வேண்டும்’ என அவர் கூறினார். மனிதவளக் குறியீட்டில் 188 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 133ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதைய நிலையை மாநில மற்றும் மாவட்ட அளவில் மாற்ற வேண்டிய தேவையும் உள்ளதாக அவர் பேசினார். மனிதவளக் குறியீட்டில் இந்தியாவின் இடத்தை மேம்படுத்தவும், இந்தியாவுக்குத் தேவையான மாற்றத்தைக் கொண்டு வரவும் இந்தியாவின் சங்கங்கள் அனைத்தும் ஒன்றாகக் கூட்டணி அமைத்துப் பணியாற்ற வேண்டுமென அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகளால் உருவாக்கப்பட்ட மனிதவளக் குறியீடு ஒரு கலப்பு புள்ளிவிவரமாகும். மக்களின் திறன்களே நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்குமென ஐநா கூறுகிறது. மனிதவளக் குறியீடு கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று முக்கியக் குறியீடுகளை உள்ளடக்கியதாகும். சுகாதாரக் குறியீடு ஆயுள் எதிர்பார்ப்பை உள்ளடக்கியது ஆகும். ஆயுள் எதிர்பார்ப்புக் குறியீட்டின்படி இது கணக்கிடப்படுகிறது. அறிவுப் பிரிவில் எதிர்பார்க்கப்படும் பள்ளிக் கல்வி ஆண்டுகள் மற்றும் சராசரி பள்ளிக் கல்வி ஆண்டுகள் ஆகிய இரண்டும் உள்ளடங்கும். வாழ்க்கைத் தரத்தை மொத்த தேசிய வருமானத்தைக்கொண்டு கணக்கிட வேண்டும் என்று 2010ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டுக்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையிலேயே வாழ்க்கைத் தரம் கணக்கிடப்பட்டது. இருப்பினும், மனிதப் பாதுகாப்பு, சமத்துவமின்மை போன்றவற்றை மனிதவளக் குறியீடு பிரதிபலிப்பதில்லை.

இந்தியர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு என்ன? கடந்த ஆண்டுகளில் இந்தியர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு 57.9இல் இருந்து 68.3ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் 84.2 ஆயுள் எதிர்பார்ப்புடன் ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. எனினும் சுகாதாரத்துக்காக அரசு செய்யும் செலவுகளை அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவிகிதம் மட்டுமே சுகாதாரத்துக்காகச் செலவிடப்படுகிறது. நார்வே நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதத்தை சுகாதாரத்துக்காகச் செலவிடுகிறது. சுகாதாரத்துக்காகச் செலவிடப்படும் நிதியில் அதிகமான பகுதி குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்குச் செலவிடப்பட வேண்டும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000க்கு 47.7 ஆகவும், கைக்குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000க்கு 37.9 ஆகவும் உள்ளது. குணப்படுத்தக் கூடிய நோய்களான மலேரியா, காசநோய் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க அரசு முயன்று வருகிறது.

மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இந்தியர்களின் இடம் முன்னேற்றம் அடைந்துள்ளது. எனினும் வருமான சமமின்மை, போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகிய பிரச்சினைகளால் இந்தியாவின் இடம் கீழிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக, இந்தியர்களுக்கு 11.5 வருட பள்ளிக் கல்வியும், உலக மக்களின் சராசரி பள்ளிக் கல்வி ஆண்டுகள் 12.5 ஆகவும், ஓ.இ.சி.டி நாடுகளின் சராசரி பள்ளிக் கல்வி ஆண்டுகள் 15.9 ஆகவும் உள்ளது. நார்வே நாட்டில் ஒன்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். இந்தியாவிலோ 32 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். இதையும் இந்தியாவில் மேம்படுத்த வேண்டும்.

இந்தியாவில் கல்வியறிவின்மை குறைந்திருக்கிறது என்றாலும்கூட இன்னமும் கல்வியறிவின்மையை அழிக்க வேண்டியதற்கான தேவையும் இடமும் உள்ளது. வெளிநாட்டுப் பெருநிறுவனங்களில் பல இந்தியர்கள் தலைமைச் செயலதிகாரிகளாகவும் பேராசிரியர்களாகவும் பதவி வகித்தாலும்கூட, அது இந்தியாவின் வளர்ச்சியைப் பிரதிபலிப்பதாக இல்லை. இந்தியர்களில் 24 சதவிகித பேர் மட்டுமே மூன்றாம் நிலை கல்வியைப் பெற்றுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவிகிதம் மட்டுமே கல்வித் துறையில் செலவிடப்பட்டுள்ளது.

உலகின் முதல் 10 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா கருதப்பட்டாலும்கூட, மொத்த தேசிய தனிநபர் வருமானத்தில் இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது. இந்தியாவின் மொத்த தேசிய தனிநபர் வருமானம் 5,663 டாலராக உள்ளது. இந்தியாவின் அதிகமான மக்கள்தொகையால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என வாதிட்டாலும்கூட, இந்தியாவைப் போலவே அல்லது இந்தியாவை விடவும் அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவின் மொத்த தேசிய தனிநபர் வருமானம் 13,345 டாலராக உள்ளது. சீனாவின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் 30.8 சதவிகிதமாக உள்ளது.

மனிதவளக் குறியீட்டில் உள்ளடங்கிய மூன்று குறியீடுகள் மட்டுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத்தை அளவிட வேறு சில பகுதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல், மக்கள்தொகை, பாலின வேறுபாடுகள், சமத்துவமின்மை, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற பகுதிகள் இதில் அடங்கும். இவையனைத்தும் மனிதவளக் குறியீட்டில் அடங்காவிட்டாலும்கூட, இப்பகுதிகளின் நிலையை ஒவ்வொரு நாட்டிலும் ஐநா மதிப்பிட்டுள்ளது. இந்தியாவிலும் இப்பகுதிகளில் நிறைய வளர்ச்சிக்கான தேவை உள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியைக் கணிசமாக மேம்படுத்தக் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் அரசு அதிகம் செலவிட வேண்டும். இந்தத் துறைகளில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தச் சமூக நிறுவனங்கள் உயிர்ப்புடன் பணிபுரிய வேண்டுமெனப் பிரதமர் மோடியும் அமிதாப் காந்தும் கோரியுள்ளனர். வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் பாலின வேறுபாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குழந்தைகளின் இறப்பு விகிதங்கள், மக்கள்தொகை ஆகிய பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பங்கெடுத்துப் பணியாற்ற வேண்டும்.

மனிதவளக் குறியீட்டுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே என்ன உறவு எனப் பரவலாகக் கேள்விகள் எழுவதுண்டு. பொருளாதார வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்துக் கணக்கிடும் முறையை 1930களில் சைமன் கஸ்னெட்ஸ் என்ற பொருளாதார வல்லுநர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் வைத்துப் பார்க்கையில், பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால் இயங்கும் முக்கியக் காரணிகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பிறகுதான் 1990களில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மனிதவளக் குறியீட்டைக் கொண்டு ஐநா மதிப்பிடத் தொடங்கியது.

2010ஆம் ஆண்டுக்கு முன்பு மொத்த உள்நாட்டுத் தனிநபர் உற்பத்தியைக் கொண்டே ஒரு நாட்டில் வாழும் மக்களின் தரம் மதிப்பிடப்பட்டது. இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளுக்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மனிதவளக் குறியீட்டுக்கும் இடையே நேர்மறையான தொடர்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு மூல காரணம் என்னவென்றால் இப்புள்ளிவிவரங்களில் மனிதவளக் குறியீடு தொடர்பான தகவல்கள் எதுவுமே கணக்கிடப்படுவது கிடையாது. கடந்த இருபது வருடங்களாக மட்டுமே மனிதவளக் குறியீடுகள் மதிப்பிடப்படுகின்றன. எதிர்காலத்தில் சேகரிக்கப்படும் தகவல்களினாலும், அவை குறித்த ஆய்வுகளினாலும் மனிதவளக் குறியீட்டின் பயன்பாடு குறித்த ஒரு விரிவான பார்வை நமக்குக் கிடைக்கும்.

நன்றி: குரியஸ்

தமிழில்: அ.விக்னேஷ்

புதன், 18 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon