மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

பியூட்டி ப்ரியா: பூசிய கன்னங்கள் வேண்டுமா?

பியூட்டி ப்ரியா: பூசிய கன்னங்கள் வேண்டுமா?

தினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையாக வீசும் சுத்தமான காற்றைச் சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவு மின்னும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் பால் மற்றும் வெண்ணெய் இரண்டையும் கலந்து முகம், கை கால்களில் தடவி வந்தால் சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும்.

எண்ணெய்ப்பசை அதிகம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ், லெமன் ஜூஸ், தக்காளி ஜூஸ் ஆகிய ஏதாவது ஒன்றுடன் சிறிதளவு தேன் கலந்து உடல் முழுவதும் தடவி பொலிவு பெறலாம்.

மிதமான வெந்நீரில் சிறிதளவு உப்பு கலந்து 10 நிமிடங்கள் வாய்க்குள் வைத்துக் கொப்பளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்வதால் கன்னம் அழகாகும்.

சந்தனம், மஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து, முகத்தில் தடவி வந்தால் முகம் நல்ல பூரிப்புடன் ஜொலிக்கும்.

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டுவந்தால் ரத்த சோகை குணமாகும். ரத்த சோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும். புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் சாப்பிட்ட உணவும் எளிதில் ஜீரணமாகும். நன்கு பசியைத் தூண்டும். முகப் பொலிவும் கிடைக்கும்.

உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊற வைத்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல்நலம் பெறும். முகம் வசீகரமாகும்.

முளைகட்டிய பச்சைப்பயறு ஒரு கப் அளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவர வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படிச் செய்து வந்தால் கன்னக்குழிகள் போய் முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டுவந்தால் கன்னத்தில் குழிகள் உண்டாகாது. தினமும் ஏதாவது ஒரு கீரை, பசும் நெய் சேர்த்துக்கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும். மேலும், மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஆனந்தம் அழகைக் கூட்டும்.

பாதாம் பருப்பை அரைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பொடியும் ஒரு டீஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்துவந்தால் உடல் பலப்படும். கன்னங்கள் பளபளக்கும்; அழகு கூடும்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது