மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

நிர்மலாவை பார்த்ததே இல்லை: ஆளுநர்!

நிர்மலாவை பார்த்ததே இல்லை: ஆளுநர்!

பேராசிரியை நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது என குறிப்பிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் நான்கு பேரை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேராசிரியை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க பல்கலைக் கழக விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், அது வாபஸ் பெறப்பட்டது. மேலும் ஆளுநர் மீது பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக இன்று மாலை (ஏப்ரல் 17) 6மணியளவில் கிண்டி ராஜ்பவனிலுள்ள தர்பார் அரங்கத்தில் ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டது.

அதன்படி செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "தமிழக ஆளுநராக நான் பதவியேற்று 6 மாதங்கள் கடந்துவிட்டது. எனவேதான் உங்களைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன். நானும் பத்திரிக்கையாளர் தான்.

பத்திரிகைகளில் சில செய்திகளைப் பார்த்தேன். இது மிகவும் முக்கிய பிரச்சினை. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்துக்குள் அவர் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வார். அவரது அறிக்கையின் அடிப்படையில் வேந்தர் என்ற முறையில் நான் நடவடிக்கை எடுப்பேன் இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பேராசிரியை நிர்மலா தேவி தங்களின் பெயரை பயன்படுத்தியுள்ளாரே என்ற கேள்விக்கு, “நான் பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றுள்ளேன் . பலர் அங்கும் இங்கும் நடமாடுவார்கள். நீங்கள் குறிப்பிடும் நபரை இதுவரை நான் பார்த்ததில்லை. மேலும், அந்த ஆடியோவில் என் தாத்தாவை போன்றவர் என்றே அப்பெண்மணி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை. விசாரணைக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும். எனக்கு பேரனுக்கு பேரன் இருக்கும் போது, என்னைப் பற்றி தவறான கருத்துகளை பேச வேண்டாம்.

பல்கலைக்கழக நியமனங்களில் மாநில அரசு தலையிட முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்" என்று தெரிவித்தார்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon