மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

டிஜிட்டல் திண்ணை: கோவையில் மாநாடு - ரஜினி முடிவு!

டிஜிட்டல் திண்ணை: கோவையில் மாநாடு - ரஜினி முடிவு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

“ரஜினிக்குத் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என எழுந்த தகவலை ஒட்டி ரஜினியின் வட்டாரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, நாம் மின்னம்பலத்தில் எழுதியிருந்த டிஜிட்டல் திண்ணை, ரஜினி ரசிகர்களிடம் பலத்த பரபரப்பை உண்டாக்கிவிட்டது. ரஜினியின் அரசியல் ஆலோசகர்களிடம் பேசியபோது சொன்ன, ‘ரஜினி தெளிவாக இருக்கிறார். புலிவாலைப் பிடித்துவிட்டார்’ என்பதையும் பதிவு செய்திருந்தோம்.

இதற்குப் பின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரஜினி தரப்புக்கு போன் மேல் போன் வந்திருக்கிறது. அதில் பல ரசிகர்கள் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கும் போன் அடித்திருக்கிறார்கள். ரஜினி வீட்டில் ரிசப்ஷனில் இருக்கும் போனில் பேசுவதை மாடியில் இருக்கும் ரிசீவரிலும் கேட்க முடியும். இதை ரஜினி அடிக்கடி செய்வார். நேற்று காலையில் கோவையிலிருந்து பேசிய ஒரு ரசிகர், ‘நான் தலைவர் கிட்ட பேசியே ஆகணும்... அவரு கட்சி ஆரம்பிக்கப் போவதே இல்லைன்னு செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு... இதெல்லாம் நல்லாவா இருக்கு...’ என்று கோபத்துடன் ஆரம்பித்திருக்கிறார். ரிசப்ஷனில் போனை எடுத்தவர், ‘நான் தலைவர் கிட்ட சொல்றேன்..’ எனச் சொன்ன அதே நேரம், ‘சொல்லு கண்ணா... நான் ரஜினி பேசுறேன்!’ என்ற குரல் இன்னொரு பக்கம் கேட்க... ரிசப்ஷனில் ரிசீவர் வைக்கப்பட்டதாம்.

கோவை ரசிகரோ, ‘நீங்க கட்சி ஆரம்பிக்கப் போறீங்கனு சொன்னதால, நான் திமுகவிலிருந்து விலகி வந்து நம்ம மன்றத்துல என்னைப் புதுப்பிச்சுக்கிட்டேன். அப்போகூட நிறையப் பேரு என்னைக் கிண்டல் செஞ்சாங்க. இந்த முறை எங்க தலைவர் கலக்கப் போறாருன்னு நான் சந்தோஷமா எல்லோருகிட்டயும் சொன்னேன். ஆனால், இப்போ வெளியில வேற மாதிரி பேசுறாங்க. நீங்க இப்படியே காலத்தை ஓட்டிட்டுப் போயிடுவீங்கன்னு சொல்றாங்க. உங்க பேச்சை நம்பித்தான் தலைவா என்னைப் போல பலரும் வேற அமைப்புகள், கட்சியில் இருந்தெல்லாம் வெளியே வந்தோம். நீங்க வருவீங்க... எதாவது நல்லது செய்வீங்கன்னு என்னைப் போல லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கோம். தோல்வியைக் கண்டு பயப்படுறீங்களா? நீங்க பார்க்காத தோல்வியா? அரசியல்னு வந்துட்டா எல்லாமே இருக்கும் தலைவா... நாங்க எதுக்கும் தயாராகத்தான் இருக்கோம். வெற்றியோ தோல்வியோ ரெண்டுல ஒரு கை பார்த்துடணும். இந்த முறையும் நீங்க எதாவது யோசிச்சா, அது உங்களை மட்டும் பாதிக்காது; உங்களையே நம்பியிருக்கும் ரசிகர்கள் எல்லோரையும் அது பாதிக்கும். அதனால, தயவுசெஞ்சு உடனே கட்சிக்கு பேரை அறிவியுங்க.. நாங்க பார்த்துக்குறோம்...’ என்று சொல்லி தேம்பித் தேம்பி அழவும் ஆரம்பித்துவிட்டாராம். அவரைச் சமாதானம் செய்து, ‘அதெல்லாம் இல்ல கண்ணா... கன்பார்மா கட்சிதான்... யாரு சொல்றதையும் நம்ப வேண்டாம்...’ என்று சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார்.

அதன் பிறகு ரஜினி, தனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்திருக்கிறார். ரசிகர்களிடமிருந்து வரும் போன் கால் பற்றிச் சொல்லியிருக்கிறார். ‘நாங்க என்ன சொன்னாலும் முடிவெடுப்பது நீதான்... உனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்...’ எனச் சொல்லியிருக்கிறார்கள் வீட்டுக்கு வந்த நண்பர்கள். பெங்களூரு ராஜ்பகதூருடனும் போனில் பேசினாராம் ரஜினி. அவரோ, ‘நான் ஆரம்பத்துல இருந்தே நீ அரசியலுக்கு வந்தேதான் ஆகணும்னு சொல்லிட்டு இருக்கேன். நீதான் மாற்றி மாற்றி முடிவு பண்ணிட்டு இருக்க.. எதையும் யோசிக்காமல் இறங்கு...’ என அவர் சொல்லியிருக்கிறார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராஜு மகாலிங்கம், சுதாகர் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்து இன்று பேசிய ரஜினி, ‘இதுவரைக்கும் நமக்கு உறுப்பினர்கள் அதிகமா எந்த மாவட்டத்திலிருந்து சேர்ந்திருக்காங்க?’ எனக் கேட்டாராம். டேட்டா விபரங்களைப் பார்த்த ராஜு மகாலிங்கம், ‘கோவை மாவட்டத்தில்தான் அதிகம் இருக்காங்க...’ என்று சொன்னாராம். ’அப்படியா’ எனத் தலையாட்டிய ரஜினி, ‘ஆச்சரியமா இருக்கே... நான் மதுரையா இருக்கும்னு நினைச்சேன்... சரி.. நாம ஏற்கெனவே கட்சி தொடர்பாகப் பேசி விஷயங்களை எல்லாம் முறைப்படுத்துங்க. நம் திட்டம், கொள்கை என்ன என்பதை ஒரு புத்தக வடிவில் கொண்டு வரணும். எல்லோருக்கும் புரியுற மாதிரி அதை பாயிண்ட் பாயிண்டாக ரெடி பண்ணுங்க. ரெடியானதும் நாம திரும்ப உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம். இந்த மாசம் நான் அமெரிக்கா போற திட்டம் இருக்கு. போறதுக்கு முன்னாடி அதை ஃபைனல் பண்ணிடணும். அப்புறம் கோவையில் மாநாடு நடத்த நாம லொக்கேஷன் பார்க்கணும். அது பிரம்மாண்டமான மாநாடாக இருக்கணும். அது மாநாடு என்பதை விட நம் கட்சியின் தொடக்க விழான்னு நினைச்சுக்கோங்க. அங்கே நம் கொள்கை என்ன... நம் திட்டம் என்ன என்பதை வெளியிடப் போறேன். இதுக்கான வேலைகளைத்தான் நாம அடுத்துப் பார்க்கணும்...’ என்று கடகடவெனச் சொல்ல... இருவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்கிறார்கள்.

‘யெஸ்... கட்சி ஆரம்பிச்சுதான் ஆகணும்... ரசிகர்களை இனி ஏமாற்ற வேண்டாம். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று உற்சாகமாகச் சொன்னாராம் ரஜினி” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon