மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

நான் நிர்மலா தேவி இல்லை: ஜெஸ்ஸி முரளிதரன் பேட்டி

 நான் நிர்மலா தேவி இல்லை: ஜெஸ்ஸி முரளிதரன் பேட்டி

சமூக வலை தளங்களில் எந்த வித சரிபார்த்தலும், கட்டுப்பாடும், தணிக்கையும் இல்லாமல் நம்பகத் தன்மை பற்றி கவலைப்படாமல் செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் பாஜகவின் மாநில மகளிரணிச் செயற்குழு உறுப்பினர் ஜெஸ்ஸி முரளிதரன். ஏனெனில் நேற்று முதல் இவர்தான் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவோரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவிகள் சிலரோடு பேராசிரியர் நிர்மலா தேவி நடத்திய அசிங்கப் பேச்சுவார்த்தையின் ஆடியோ ஓரிரு நாள் முன் வெளிவந்தது. அந்த நிர்மலாதேவி தன் பேச்சில் கவர்னர் என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் அந்த நிர்மலா தேவி போன்ற முகச் சாயல் இருப்பதால் பாஜக மகளிரணி தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெஸ்ஸியின் புகைப்படத்தை எடுத்து நிர்மலா தேவி என்று பெயரிட்டு, அவர் மீதும் பாஜக மீதும் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகின்றனர் பலர்.

இன்று காலை முதல் இது அதிகமாக, உடனடியாக ஜெஸ்ஸி முரளிதரன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தெரிவித்திருக்கிறார். மேலும் வானதி சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுதும் இதுபோன்று சமுக வலை தளங்களில் தவறான தகவலை பரப்புவோர் மீது சைபர் க்ரைம் போலீஸாரிடம் பாஜக சார்பில் புகார்களும் கொடுக்கப்பட்டுவருகின்றன.

நாம் இதுபற்றி தமிழக பாஜக மகளிரணி செயற்குழு உறுப்பினரிடம் பேசினோம் .

‘’பாஜக சார்பில் நாங்கள் பல்வேறு உண்மைகளை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தோம். அதனைப் பொறுக்க முடியாத பலர் இப்போது என் புகைப்படத்தை எடுத்துப் போட்டு. இவர்தான் நிர்மலா தேவி, இவர் பாஜக மகளிர் அணியில் இருப்பதால்தான் கவர்னர் இதில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறார் என்றெல்லாம் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள்.

இன்று காலை கமலாலயம் சென்றேன். கட்சியின் சோஷியல் மீடியா மாநிலத் தலைவர் திலீப் குமார், எங்களுடைய வழக்கறிஞர் பிரிவினரோடு ஆலோசித்தோம். மாநிலத் தலைவர் தமிழிசை என்னைக் கட்டிப் பிடித்து போட்டோ எடுத்து அவரது பேஸ்புக்கில் போட்டார். வானதி சீனிவாசன் அவர்கள் பேசி தைரியம் சொன்னார். ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் சுப்பிரமணிய பிரசாத், எங்கள் கோட்டப் பொறுப்பாளர் சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை கட்சி எடுக்கும் என்று உறுதியளித்தார்கள்.

இந்த விவகாரம் பற்றி நாளை டி.ஜி.பி.யை சந்தித்து புகார் கொடுக்க இருக்கிறோம். நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். என் உயிர் போனாலும் பிஜேபி.யை விட்டுப் போக மாட்டேன்’’ என்றவர்,

“பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற தளங்களை முறைப்படுத்த வேண்டும். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். இதற்குக் கடுமையான சட்டங்கள் வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

நடவடிக்கை இல்லையெனில் போராட்டம்!

நம்மிடம் பேசிய தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவர் சுப்பிரமணிய பிரசாத்,

’’எங்கள் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான ஜெஸ்ஸி முரளிதரனின் புகைப்படத்தை, தவறாக சித்தரித்து, இவர்தான் பேராசிரியை நிர்மலா தேவி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இதுபோன்ற சமூக வலை தள அராஜக தீய சக்திகள் முழுமையாக அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இனி யாருக்கும் சந்தேகம் இருக்காது. இது தொடர்பாக காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் இலாக்காகளில் புகார் கொடுக்கப்பட்டுவருகிறது. உடனடி நடவடிக்கை இல்லை எனில் தீவிர போராட்டத்திற்குத் தயராவோம்’’ என்றார் பிரசாத் .

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon